வணிகம்
உஷார் மக்களே; லோன் ஆப்களில் நடக்கும் மோசடி: உங்களை தற்காத்துக் கொள்ள முக்கிய குறிப்புகள் இதோ

உஷார் மக்களே; லோன் ஆப்களில் நடக்கும் மோசடி: உங்களை தற்காத்துக் கொள்ள முக்கிய குறிப்புகள் இதோ
நிதி நெருக்கடியான காலங்களில் பணம் தேவைப்படும் போது, உடனடி கடன் வழங்கும் செயலிகள் பலருக்கு முதல் தேர்வாக இருக்கின்றன. ஆனால், இந்த செயலிகளை பயன்படுத்தும் போது நாம் கவனமாக இல்லாவிட்டால், மோசடி கும்பலின் வலையில் சிக்கி பணத்தை இழக்க நேரிடும். சமீப காலமாக, கடன் செயலிகள் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள சில அத்தியாவசிய தகவல்களை இங்கே காணலாம்.நாம் ஒரு மொபைல் செயலியை பதிவிறக்கும் போது, நமது தொடர்பு பட்டியலையும், புகைப்பட கேலரியையும் அணுக அனுமதி கோரப்படும். பல சமயங்களில் நாம் இதை ஒரு பொருட்டாக கருதாமல் அனுமதியை வழங்கி விடுவோம். ஆனால், சில சைபர் குற்றவாளிகள் இந்த தகவல்களை பயன்படுத்தி, பணத் தேவைக்காக கடன் செயலிகளை நாடும் நபர்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர்.கடன் செயலிகளை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை:கடன் வழங்கும் செயலிகளை பயன்படுத்தும் போது, உங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.1. நம்பகமான செயலிகள்:கடன் வழங்கும் செயலி, புகழ் பெற்றதாகவும், ரிசர்வ் வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (NBFC) தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும்.வங்கிகள், தங்கள் சில செயல்பாடுகளை கடன் சேவை வழங்குநர்களுக்கு (LSPs) அவுட்சோர்ஸ் செய்கின்றன. இவர்கள் நேரடியாக நிதி பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை என்றாலும், அவை ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுகின்றன. எனவே, கடன் பெறுபவர் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்துகொள்வது முக்கியம்.2. அதிக வட்டி விகிதம்:உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், வட்டி விகிதம் சற்று அதிகமாக (12-18 சதவீதம்) இருக்கலாம். ஆனால், 35 சதவீதம் போன்ற மிக அதிக வட்டி விகிதங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதுபோன்ற அதிக வட்டி விகிதங்களை கேட்கும் கடன் வழங்குநர்கள் பதிவு செய்யப்படாதவர்களாக இருக்கலாம். உடனடி பணம் தேவைப்படும் நபர்களை குறிவைத்து அவர்கள் செயல்படலாம். சமீபத்திய ஒரு வழக்கில், ரூ. 5000 கடனுக்கு, ரூ.15,000 திரும்ப செலுத்தக் கோரப்பட்டுள்ளது. இது கடன் தொகையை விட 200 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.3. ஒழுங்குமுறைகள் (Regulations):முக்கியமாக, கடன் வழங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனத்தின் சார்பாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். ஒழுங்குமுறைகளின் கீழ் வராத நிறுவனங்கள், பயனர்களை சுரண்ட எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள்.மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு, விழிப்புடன் செயல்படுவதன் மூலம் கடன் செயலிகள் வாயிலாக நடக்கும் மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். அவசர தேவைக்காக கடன் தேடும் போது, இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.