பொழுதுபோக்கு
ஜார்ஜ் குட்டி – சுயம்புலிங்கம் இருவரையும் பழி வாங்கணும்; ஆனா நான் அவங்க பக்கம் தான்; த்ரிஷ்யம் 3 அப்டேட் கொடுத்த ஆஷா சரத்

ஜார்ஜ் குட்டி – சுயம்புலிங்கம் இருவரையும் பழி வாங்கணும்; ஆனா நான் அவங்க பக்கம் தான்; த்ரிஷ்யம் 3 அப்டேட் கொடுத்த ஆஷா சரத்
திரிஷ்யம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆஷா சரத் அப்படத்திற்கான 3 பாகத்தை பற்றிய முக்கிய அப்டேட்டை எஸ்.எஸ் மியூஸிக் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரபல இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான ஆஷா சரத், மலையாளத் திரையுலகில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.இவர் சில தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, ஐ.ஜி. கீதா பிரபாகர் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது அவருக்குப் பெரிய புகழைக் கொடுத்தது. “திரிஷ்யம்” படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசனுடன் இதே கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.திரிஷ்யம் திரைப்படம் ஆஷா சரத் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. மோகன்லால் போன்ற ஜாம்பவானுடன் நடித்தது குறித்து அவர் பேசுகையில், “மோகன்லால் சாருடன் நடிக்கும்போது, ஒரு சூப்பர் ஸ்டாருடன் இருக்கிறோம் என்ற உணர்வே இருக்காது. அவர் மிகவும் கூலாகவும், இயல்பாகவும் பழகுவார்” என்று தெரிவித்தார். திரிஷ்யம் 2 படப்பிடிப்பின் போது மோகன்லால் மிகவும் அமைதியாக இருந்ததாகவும், அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.இந்நிலையில், திரிஷ்யம் 3 படத்திற்கான எதிர்பார்ப்பு குறித்தும் ஆஷா சரத் பேசினார். இயக்குனர் ஜீத்து ஜோசப், அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளதாகவும், தானும் படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். திரிஷ்யம் 2-ல் மோகன்லாலிடம் பழிவாங்கும் வாய்ப்பை இழந்ததாகவும், ஆனால் திரிஷ்யம் 3-ல் ஜார்ஜ் குட்டி மற்றும் சுயம்புலிங்கத்திடம் பழிவாங்க தனக்கு ஆசை இருப்பதாகவும் நகைச்சுவையாகக் கூறினார்.த்ரிஷ்யம் மற்றும் அதன் தொடர்ச்சியான த்ரிஷ்யம் 2 ஆகிய இரண்டு படங்களும் இந்திய சினிமாவில் மிகவும் பாராட்டப்பட்ட திரில்லர் படங்களில் முக்கியமானவை. இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் நடிகை மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சாதாரண குடும்பத் தலைவன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எப்படி வியத்தகு சவால்களை எதிர்கொள்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப் படங்கள் உருவாகியுள்ளன.த்ரிஷ்யம் 2 முதல் பாகத்தைப் போலவே விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம், தனது விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக சிறப்பாக அமைந்திருந்ததால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் ஆஷா சரத் கொடுத்த அப்டேட் ரசிகர்களுக்கு எப்போது த்ரிஷ்யம் 3 வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.