இலங்கை
யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையை கிளறும் அர்ச்சுனா எம்.பி!

யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையை கிளறும் அர்ச்சுனா எம்.பி!
யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், விசாரணைகள் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன? ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஊழலுக்கு துணைபோகிறதா? என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது அர்ச்சுனா எம்பி கூறுகையில்,
யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கூறப்பட்டு வரும் நிலையில், அவை தொடர்பான முறையான விசாரணைகளை நடத்த தாமதிப்பது எதற்காக?
தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக நான் பல விடயங்களை முன்வைத்துள்ளேன்.
வைத்தியசாலையின் பெயரை வைத்து சொந்தப் பெயரில் வங்கிக் கணக்குகளை திறக்க முடியுமா?
வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம், இரு கணக்குப் புத்தகங்களை பாவித்து பணம் கையாடப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் நிதிக் குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அந்த வங்கிப் புத்தகத்தின் முகப்புப் பக்கங்கள் தேவையாக உள்ளது.
அதனை ஒருங்கிணைப்புக் குழு எனக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும். மக்களின் பணத்தை மோசடி செய்தவர்களை கைவிட முடியாது.
இந்த அரசாங்கம் ஊழலற்ற ஆட்சி எனக் கூறி ஆட்சியை பிடித்தது, இந்த அரசாங்கத்தின் அமைச்சராக, இருக்கும் நீங்கள் ஊழலை ஊக்குவிக்கும் அமைச்சரா என கேள்வி எழுப்பினார்.
மேலும், நான் கணக்காய்வு அறிக்கை கேட்டு 6 மாதங்கள் ஆகிறது. இன்னும் தரவில்லை. நான் ஏதும் கேட்டால் என்னை அச்சுறுத்துகிறார்கள். வழக்கு தொடருவோம் என்கிறார்கள்.
என்ன நடந்தாலும் பரவாயில்லை. மக்களின் பணத்தை கொள்ளையடிக்க விடமுடியாது. இந்த ஒருங்கிணைப்புக் குழு தெல்லிப்பழை வைத்தியசாலையின் கணக்கு விபரங்களை தனக்கு பெற்றுத்தரவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூறினார்.