பொழுதுபோக்கு
12 வயதில் ஹீரோயின் வாய்ப்பு; அனுபவம் இருப்பது ஒரு குத்தமா? அதை சொல்லியே ரிஜக்ட் பண்றாங்க: பிரபல நடிகை வேதனை!

12 வயதில் ஹீரோயின் வாய்ப்பு; அனுபவம் இருப்பது ஒரு குத்தமா? அதை சொல்லியே ரிஜக்ட் பண்றாங்க: பிரபல நடிகை வேதனை!
சினிமாவை விட சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர்கள், மக்களுக்கு கூடுதல் நெருக்கத்துடன் இருப்பார்கள். ஏனெனில், சீரியல்களை நாள்தோறும் வீட்டில் பார்த்துக் கொண்டிருப்பதால், இவர்களுக்கான ரசிகர்களும் அதிகமாக இருப்பது வழக்கம் தான். அந்த வகையில், சீரியல்கள் மூலம் புகழ் பெற்று சினிமாவில் நடித்தவர்களில் நடிகை வினிதாவும் ஒருவர்.நடிகை வினிதா, குழந்தை நட்சத்திரமாக தனது கலை பயணத்தை தொடங்கினார். குறிப்பாக, நடிகை ராதிகாவின் ‘அண்ணாமலை’ சீரியல் மூலம் இவர் மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பின்னர், சில படங்களில் நடித்திருந்தாலும், நகுல், சுனைனா ஆகியோரது நடிப்பில் வெளியான ‘மாசிலாமணி’ திரைப்படம் பலரிடம் இவரை கொண்டு சேர்த்தது. இந்நிலையில், தனது சினிமா மற்றும் சீரியல் பயணம் குறித்து டெலி விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பல்வேறு தகவல்களை நடிகை வினிதா பகிர்ந்து கொண்டார்.அதில், “சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டேன். அப்போதே பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தேன். இதன் காரணத்தினால் சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் இழந்திருக்கிறேன். ஏனெனில், மக்கள் புதியவர்களை விரும்புவதாகக் கூறி, பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.இது தவிர காரணங்கள் சொல்லாமல் வாய்ப்பு தர மறுக்கின்றனர். சினிமாவில் பல ஆண்டுகள் அனுபவத்துடன் இருப்பதே ஒரு குற்றம் போன்று பார்க்கின்றனர். நாம் ஏற்கனவே செய்த கதாபாத்திரத்தை பார்த்து நடிக்க வாய்ப்பு கொடுக்கப்படும். இதேபோல், அந்த கதாபாத்திரத்திற்கு நாம் பொருத்தமாக இருப்போம் என்று படத்தின் இயக்குநர் கருதினால், நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுவே சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்கான நடைமுறையாக இருந்தது.2004-ஆண்டில் கலை துறையில் நுழைந்து விட்டேன். அப்போது, ‘அண்ணாமலை’ தொலைக்காட்சி தொடரில் ராதிகாவுடன் இணைந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். இன்றைய சூழலில் ஒருவரை நடிக்க வைப்பது தொடர்பாக முடிவு எடுக்கும் உரிமை இயக்குநருக்கு இல்லை என்று கூறுகிறார்கள். இப்போது, எந்த அடிப்படையில் ஒரு நபருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நான் நடிக்கத் தொடங்கிய காலத்தில், உதவி இயக்குநர் பணியையும் நாங்கள் பார்த்தோம். ஒரு காட்சியில் நான் நடித்தால் கூட அதற்கு மக்கள் இடையே வரவேற்பு கிடைக்கும் வகையில் அமைந்து விடும். அதில், ‘மாசிலாமணி’ திரைப்படம் என்னை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் சென்றது என்று கூறலாம்” என நடிகை வினிதா தெரிவித்துள்ளார். இவர் ‘மதயானை கூட்டம்’ திரைப்படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.