பொழுதுபோக்கு
வாசலில் கோயில் மணி… உள்ளே சந்திரமுகி ஒரிஜினல் கதவு; வீட்டுக்குள் வரும் மழைநீர்: கவனம் ஈர்க்கும் கோபி நாயர் ஹோம் டூர்!
வாசலில் கோயில் மணி… உள்ளே சந்திரமுகி ஒரிஜினல் கதவு; வீட்டுக்குள் வரும் மழைநீர்: கவனம் ஈர்க்கும் கோபி நாயர் ஹோம் டூர்!
பிரபலங்களின் ஹோம் டூர் அடிக்கடி இணையத்தில் பலரது கவனத்தை ஈர்க்கும். அதன்படி, பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் கோபி நாயரின் ஹோம் டூர் டெலி விகடன் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இடம்பெற்ற சில சுவாரஸ்ய விஷயங்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.இவர்கள் இல்லத்திற்கு “லக்ஷ்மி விலாசம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. வீட்டின் நுழைவாயில் நான்கு கதவுகளுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. காலை நேரத்தில் இந்த கதவுகளை திறக்கும் போது, அங்கிருந்து வரும் ஒளி நேரடியாக சாமி படங்கள் மீது படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் தொங்கும் பெரிய வெண்கல கோயில் மணி, மங்கல ஒலியை எழுப்பி வீட்டிற்குள் நுழைபவர்களை வரவேற்கிறது. இது தவிர வீட்டின் வெளிப்புற செங்கல் வேலைப்பாடுகள் தனித்துவமான ‘ஸிக்ஸாக்’ வடிவத்தில் அமைந்துள்ளன.கேரள பாரம்பரியத்தின்படி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக நெற்கதிர்கள் நுழைவாயிலில் தொங்கவிடப்பட்டுள்ளன. பிரதான கதவில் விநாயகர், சரஸ்வதி, மற்றும் லக்ஷ்மி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது வீட்டை ஒரு கோயில் போல உணர வேண்டும் என்ற அவர்களது விருப்பத்தை பிரதிபலிக்கிறது. வீட்டின் மையப் புள்ளியாக “நடுமுற்றம்” அமைந்துள்ளது. மழைநீர் உள்ளே வரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, சரியான வடிகால் அமைப்பையும் கொண்டுள்ளது. முற்றத்தில் உள்ள பெரிய கான்கிரீட் தூண்கள் கருங்கல்லைப் போன்று வடிவமைக்கப்பட்டு, கோயிலின் கட்டுமானத்தை நினைவுபடுத்துகின்றன.சுமார் 25 கிலோ எடையுள்ள ஒரு பெரிய பாரம்பரிய விளக்கு முற்றத்தில் நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் போன்ற விசேஷ சடங்குகளுக்காக முற்றத்தில் தண்ணீர் மற்றும் பூக்களை நிரப்பக்கூடிய வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. வீட்டின் வடிவமைப்பு, குறிப்பாக செங்கல் வேலைப்பாடுகள், வெப்பநிலையை சீராக்கி, கோடையில் வீட்டை குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக “சந்திரமுகி” திரைப்படத்தில் காணப்பட்டதைப் போன்ற அசல் “மணிச்சித்திரத்தாழ் பூட்டு” கொண்டு வீட்டினுள் கதவு வடிவவைக்கப்பட்டுள்ளது. இருப்பிடம் என்பது மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும். அந்த வகையில் வாய்ப்பு கிடைத்தால், அந்த தேவையை கலை நயத்துடன் மாற்ற முடியும் என்பதற்கு கோபி நாயரின் ஹோம் டூர், ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.