வணிகம்
வெறும் 665 ரூபாயுடன் துபாய் சென்ற இந்திய தொழிலதிபர்… ஆப்பு வைத்த அந்த ஒரு ட்வீட்: ரூ.12,478 கோடி சாம்ராஜ்யம் சரிந்தது எப்படி?

வெறும் 665 ரூபாயுடன் துபாய் சென்ற இந்திய தொழிலதிபர்… ஆப்பு வைத்த அந்த ஒரு ட்வீட்: ரூ.12,478 கோடி சாம்ராஜ்யம் சரிந்தது எப்படி?
ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் முன்னணி தொழிலதிபராக விளங்கிய பி.ஆர். ஷெட்டி, சுகாதாரம் மற்றும் நிதித் துறைகளில் தனது முயற்சியின் மூலம் பில்லியன் டாலர் மதிப்பிலான சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார். இமாலய வெற்றியை பெற்ற போதிலும், அவர் ஒரு அதிர்ச்சிகரமான வீழ்ச்சியை சந்தித்தார். இறுதியில் தனது ரூ. 12,478 கோடி மதிப்புள்ள வணிகத்தை வெறும் ரூ. 74-க்கு விற்றார்.ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற ஷெட்டி, சொகுசு கார்கள், தனி விமானங்கள் மற்றும் துபாயின் புர்ஜ் கலீஃபாவில் இரண்டு கட்டடங்களை கூட சொந்தமாக வைத்திருந்தார். ஆனால், ஒரு நிதி ஊழல் அவரது தலைவிதியை தலைகீழாக மாற்றியது. இது கார்ப்பரேட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகளில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டது.1942 ஆம் ஆண்டு கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கபுவில் பிறந்த பி.ஆர். ஷெட்டி, ஒரு மருத்துவ பிரதிநிதியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். சாதாரண பின்னணியில் இருந்து வந்த போதிலும், அவர் பெரிய கனவுகளை கொண்டிருந்தார். விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு மூலம் சுகாதாரத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க அமைப்பை உருவாக்க அவர் விரும்பினார்.31 வயதில், பி.ஆர். ஷெட்டி சுமார் ரூ. 665 உடன் துபாய் சென்றார். அவர் வீடு வீடாகச் சென்று மருந்துகளை விற்றார். அவரது விடாமுயற்சி மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவை அவருடைய வணிக சாம்ராஜ்யத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவின.1975 ஆம் ஆண்டில், அவர் என்.எம்.சி ஹெல்த் நிறுவனத்தை நிறுவினார். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் தனியார் சுகாதார சேவை வழங்குநராகும். இந்திய புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை உணர்ந்து, பின்னர் யு.ஏ.இ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தை தொடங்கினார். இது விரைவில் பணப் பரிமாற்ற சேவைகளில் ஒரு முக்கிய பங்கு வகிப்பவராக அவரை மாற்றியது.அவரது வணிக சாம்ராஜ்யம் சுகாதாரம், நிதி, ரியல் எஸ்டேட் என விரிவடைந்தது. 2019 ஆம் ஆண்டிற்குள், அவரது சொத்துகள் சுமார் ரூ. 20,000 கோடி உயர்ந்தது. இது அவரை பணக்கார கன்னடர்களில் ஒருவராகவும், உலகளாவிய வணிக வட்டாரங்களில் ஒரு முக்கிய நபராகவும் மாற்றியது.அளவற்ற செல்வத்துடன், ஷெட்டி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தார். பல ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், தனி விமானங்கள், புர்ஜ் கலீஃபாவில் ரூ. 200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள இரண்டு கட்டடங்கள் மற்றும் துபாயில் பல வில்லாக்கள் உட்பட ஆடம்பரமான சொத்துகளை அவர் சொந்தமாக வைத்திருந்தார். இவை அவரது வெற்றிக்கு ஒரு அடையாளமாக விளங்கின.2019 ஆம் ஆண்டில், இங்கிலாந்தை தளமாக கொண்ட “மட்டி வாட்டர்ஸ்” (Muddy Waters) நிறுவனம், பி.ஆர். ஷெட்டியின் நிறுவனங்கள் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது. ஷார்ட்-செல்லிங் நிறுவனமான மட்டி வாட்டர்ஸ், 1 பில்லியன் டாலர் கடனை அம்பலப்படுத்தி ஒரு அறிக்கையை ட்விட்டர் (எக்ஸ் தளம்) மூலம் வெளியிட்டது. கார்சன் பிளாக் தலைமையிலான மட்டி வாட்டர்ஸ் குற்றச்சாட்டுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்து, நிறுவனத்தின் பங்குகளை வீழ்த்தி, நிதி குழப்பம் மற்றும் சட்டபூர்வமான விசாரணைகளுக்கு வழிவகுத்தன. இந்த நிலைமை அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை போல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நெருக்கடி ஷெட்டியை தனது ரூ. 12,478 கோடி நிறுவனத்தை வெறும் ரூ. 74-க்கு இஸ்ரேல்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டமைப்பிற்கு விற்க கட்டாயப்படுத்தியது. அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், அவரது வணிகங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அவர் அனைத்தையும் இழந்தார். இது வரலாற்றில் மிக முக்கிய வீழ்ச்சிகளில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டது.ஃபோர்ப்ஸ் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் பி.ஆர். ஷெட்டியின் நிகர மதிப்பு 3.5 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது. இது அவரை மத்திய கிழக்கில் மிகவும் செல்வாக்கு மிக்க தொழிலதிபர்களில் ஒருவராகவும், நிதி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பரந்து விரிந்த வணிக சாம்ராஜ்யத்தைக் கொண்டவராகவும் நிலைநிறுத்தியது.