இலங்கை
இன்று ஆடி முதல் ஞாயிறு ; இவ்வாறு வழிபாடு செய்யுங்கள்

இன்று ஆடி முதல் ஞாயிறு ; இவ்வாறு வழிபாடு செய்யுங்கள்
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே விடுமுறை நாள் என்பதால் அனைவருக்கும் பிடித்தமான நாளாக உள்ளது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை என்பது வழிபாட்டிற்கு மிகவும் உன்னதமான ஒரு நாள் ஆகும்.
குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற நாள் என்றால் அது ஞாயிற்றுக்கிழமை தான். ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானின் ஆற்றல் அதிக நிறைந்திருக்கும் ஒரு நாளாகும்.
இந்த ஆண்டு ஆடி முதல் ஞாயிறு ஜூலை 20ம் திகதி வருகிறது. அன்றைய தினம் கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் இன்னும் சிறப்பானது ஆகும்.
எப்போதும் எந்த வழிபாட்டை துவங்குவதற்கு முன்பும் முதலில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். அதன் படி ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையில் குலதெய்வத்தை வழிபடுவது சிறப்பு.
சிலர் ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு பல விதமான அபிஷேகங்கள் செய்து வழிபடுவார்கள். இன்னும் சிலர் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இன்னும் சிலர் படையல் போட்டு வழிபடுவார்கள்.
இன்னும் சில பகுதிகளில் விழா எடுத்தும் வழிபாடுவார்கள். இப்படி எந்த முறையில் வழிபடும் பழக்கம் இருந்தாலும் அந்த முறையில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையில் வழிபட வேண்டும்.
குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து, அதை வீட்டில் இருக்கும் குல தெய்வம் படத்திற்கு முன்பாக வைத்து படைக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்த குலதெய்வத்திற்கு பூஜை செய்து மனதார வழிபட வேண்டும். பிறகு நைவேத்தியமாக படைத்த சர்க்கரை பொங்கல் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டு, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று யாராவது ஒருவரை வீட்டிற்கு அழைத்து உணவு அளிப்பத மிகவும் சிறப்பு. வீட்டிற்கு வருபவர்களுடன் மகாலட்சுமியும் கூட வருவாள் என்பது ஐதீகம்.
அதனால் வீட்டிற்கு வருபவர்களை நன்கு உபசரித்து, உணவளித்து, அவர்களை மன மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
இப்படி செய்தால் மகாலட்சுமியும் மனம் மகிழ்ந்து அந்த வீட்டிலேயே தங்கி விடுவாளாம். ஒருவேளை வீட்டிற்கு வருபவர் திரும்பிச் செல்லும் போது மன வருத்தத்துடன் சென்றால் அவருக்கு முன்பாக மகாலட்சுமி, நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என சொல்வார்கள்.
அதனால் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும், குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கும் ஆடி ஞாயிற்றுக்கிழமையில் யாருகு்காவது உணவளிப்பது சிறப்பானது.