இலங்கை
திருகோணமலை சம்பூர் படுகொலை தூபிக்கு அருகிலும் மனித என்புக்கூடுகள் மீட்பு

திருகோணமலை சம்பூர் படுகொலை தூபிக்கு அருகிலும் மனித என்புக்கூடுகள் மீட்பு
திருகோணமலை – சம்பூர் கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது, சில மனித என்புக்கூடுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், நீதவான் குறித்த பகுதியைச் சென்று பார்வையிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த பகுதியில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமையை, மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மூதூர் – சம்பூர் கடற்கரையோர பகுதியில் கடந்த வியாழக்கிழமை நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.