இலங்கை
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு அமுலிற்கு வரும் கட்டுப்பாடுகள்!
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு அமுலிற்கு வரும் கட்டுப்பாடுகள்!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா காலத்தில் ஆலயத்தின் பின்புறமாகவுள்ள பருத்தித்துறை வீதியை திறந்து விடுமாறு யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை (19) யாழ். மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.
யாழ். மாநகர முதல்வர், யாழ் மாநகர சபை ஆணையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
குறித்த தீர்மானங்களின் படி,
ஜுலை 27 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.
வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ்.நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.
ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.
அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
ஆலய வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமைபோல மாநகர சபையினால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும். நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. ஆலய வெளிவீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
உற்சவ காலங்களில் ஆலய சூழலில் பக்தி கீதங்களை மாத்திரமே ஒலிபரப்பு செய்யமுடியும். உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுளின் உருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
உற்சவ காலத்தில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்தல், வானூர்தியை பயன்படுத்தி பூ சொரிதல் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகளை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
உற்சவ காலங்களில் ஆலய வெளிச் சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.