இலங்கை
ஐ.நாவின் பலவீனத்தை பயன்படுத்தி பொறுப்புக்கூறலை முடக்க முயற்சி! கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவிப்பு

ஐ.நாவின் பலவீனத்தை பயன்படுத்தி பொறுப்புக்கூறலை முடக்க முயற்சி! கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவிப்பு
இலங்கை அரசாங்கம் கெட்டித்தனமாக ஐ.நாவுக்குள் உள்ள பலவீனத்தைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் கோரிக்கையை முற்றாக முடக்குவதற்கான யுக்தியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான பொது நிலைப்பாட்டுக்குத் தமிழ் மக்கள் வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, சிவில் அமைப்புகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தற்போது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் விடயம் முற்றுமுழுதாக முடிவுக்கு வரும் அபாயம் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலத்தில் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் அரசாங்கத்தின் அங்கமாகவும், அரசாங்கத்துக்கு அங்கீகாரத்தைத் தேடிக்கொடுக்கும் வகையில் செயற்படும் அளவில் நிலைமை உள்ளது என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தாக இருக்கின்றது.
சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பதிலாக புதிய சுயாதீனக் கட்டமைப்பை ஒருவாக்கி அதன் கூடாக அனைத்து விடயங்களையும் நேர்மையாக முன்னெடுக்கலாம் என்ற போலி நம்பிக்கையை ஐ.நா. ஊடாகக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் தீவிரமாகச்செயற்படுகின்றது.
இந்த ஆபத்தை விளங்கியே அனைவரையும் ஒன்றிணைத்து. பிரதானமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் இணைத்து பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். துரதிஷ்டவசமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தீர்மானித்துள்ளது என்று எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் புதிய கோரிக்கைக் கடிதம் ஒன்றை நாம் தயாரிக்கவேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வெளியிட்ட கடிதத்தின் மூலக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்போது தேவையாகவுள்ள மேலதிக விடயங்களையும் உள்ளடக்கி இந்தக் கடிதம் தயாரிக்கப்படும்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் இவைதான் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். ஜெனீவா அமர்வு தொடங்குவதற்கு முன்பாக இந்த கோரிக்கைகளை தவிர்த்து எட்டப்படும் முடிவுகள் பாதிக்கப்படும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற செய்தியை சர்வதேசத்துக்கு அழுத்தமாகத் தெரிவிப்பதே எமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்- என்றார்.