இலங்கை
சம்பூரிலும் வெளிவந்தன மனித எலும்பு எச்சங்கள்

சம்பூரிலும் வெளிவந்தன மனித எலும்பு எச்சங்கள்
மிதிவெடி அகற்றியபோது அதிர்ச்சி
மனிதப் புதைகுழியா? என அச்சம்
நாளைமறுதினம் அகழ்வு நடவடிக்கை
திருகோணமலை, சம்பூர் கடற்கரையை அண்மித்த பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் சில மனித என்பு எச்சங்கள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளதுடன், நாளைமறுதினம் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ‘மக்’ எனப்படும் மிதிவெடி அகற்றும் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை மிதிவெடி அகற்றும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. நேற்று அந்தப்பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையின்போது மனித என்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பாக நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது. சிதைவடைந்த மண்டையோடு. கால் என்புப் பகுதிகள் என்பனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்துக்கு வந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் அந்த இடத்தை பார்வையிட்டார். மிதிவெடி அகற்றும் பணியை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார்.
என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வுத் திணைக்களம், சட்ட மருத்துவ அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் நாளைமறுதினம் புதன்கிழமை அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியிலேயே (சுமார் 40கிலோமீற்றர் தூரத்தில்) இந்த மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.