பொழுதுபோக்கு
நீங்க மாட்டிக்கிட்டீங்க; உங்களால் வெளிய வரவே முடியாது; பிரபல நடிகருக்கு ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை

நீங்க மாட்டிக்கிட்டீங்க; உங்களால் வெளிய வரவே முடியாது; பிரபல நடிகருக்கு ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை
நடிகர் சரவணன் 1991 ஆம் ஆண்டு வெளியான ‘வைதேகி வந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் பல திரைப்படங்களில் நாயகனாகவும், குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். முக்கியமாக ‘பருத்திவீரன்’ இதில் இவரது “சித்தப்பு” கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்தக் கதாபாத்திரம் இவருக்கு ஒரு அடையாளமாகவே மாறியது. இந்நிலையில் நடிகர் சரவணன் இண்டியாக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘பருத்திவீரன்’ திரைப்படம் வெளியான பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். ‘பருத்திவீரன்’ படத்தில் “சித்தப்பு” என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிறகு, ரஜினிகாந்த் படம் பார்த்துவிட்டு, சரவணனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.சம்பவத்தை விவரிக்கும்போது சரவணன், “நான் ’16 வயதினிலே’ படத்தில் ‘பராட்டா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் பெயரிலிருந்து வெளியே வர என்னால் ரொம்ப நாள் கஷ்டப்பட்டேன். ஆனால், நீங்கள் ‘பருத்திவீரன்’ படத்தில் ‘சித்தப்பு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள். இந்தக் கதாபாத்திரத்தின் பெயரை உங்களால் மாற்றவே முடியாது. நீங்கள் மாட்டிக்கிட்டீங்க சார்! ஏன்னா, பராட்டாவை விட சித்தப்பா என்பது ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் ஒரு சித்தப்பா இருப்பான். அதனால, உங்களால் வாழ்க்கையில இந்த சித்தப்புங்கிற பேரை மாத்தவே முடியாது” என்று ரஜினிகாந்த் கூறியதாகத் தெரிவித்தார்.ரஜினிகாந்த் சொன்னது போலவே, ‘பருத்திவீரன்’ வெளியாகி 17 வருடங்கள் ஆன பிறகும், இன்னும் எங்கு சென்றாலும் மக்கள் தன்னை “சித்தப்பு, சித்தப்பு, சித்தப்பு” என்று தான் அழைக்கிறார்கள் என்றும், ராயன், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்த பிறகும் கூட, அந்தப் பெயர் மாறவில்லை என்றும் சரவணன் வேடிக்கையாகக் குறிப்பிட்டார். “அது தலைவர் சொன்ன வாக்கு, வேத வாக்கு” என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.’பருத்திவீரன்’ படத்தில் அவர் ஏற்று நடித்த ‘சித்தப்பு’ கதாபாத்திரம், ஒரு பிராண்ட் போலவே மாறிவிட்டது. இந்தக் கதாபாத்திரம் அவருக்கு தனித்துவமான அடையாளத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல், ரசிகர்களுடன் ஒரு நேரடி தொடர்பையும் ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் கூட இது பற்றி குறிப்பிட்டது, இந்தக் கதாபாத்திரத்தின் தாக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.