இலங்கை
பொது எதிரணியை உருவாக்க திரைமறைவில் தீவிர பேச்சு; தமிழ்க் கட்சிகளுடன் பேசவும் திட்டம்

பொது எதிரணியை உருவாக்க திரைமறைவில் தீவிர பேச்சு; தமிழ்க் கட்சிகளுடன் பேசவும் திட்டம்
பொது எதிரணியை உரு வாக்குவதற்குரிய பேச்சுகள் தற்போது தீவிரமாக கொழும்பு அரசியல் களத்தில் நடைபெறுகின்றன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேச்சு நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பொது எதிரணி என்ற கட்டமைப்புக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கியமான வகிபாகத்தில் இருப்பார் என்று தெரியவருகின்றது.
நாடாளுமன்றத்துக்குள்ளும், அதற்கு வெளியிலும் தேசிய முக்கியத்துவமிக்க விடயங்களின் போது ஐக்கிய மக்கள் கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன அதிகாரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி என்பன இணக்கத்துடன் செயற்படுகின்றன. தேசிய சுதந்திர முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கின்றன.
இந்தப் பின்னணியில் பொதுவேலைத் திட்டத்தின் கீழ் எதிரணிகளை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்று. அதற்குரிய பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களையும் இந்தக் கூட்டுக்குள் உள்வாங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக்கட்சிகளை இணைப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் கடும்போக்குடைய சிங்களத் தேசியவாதக் கட்சிகள், அமைப்புகள் என்பனவும் பொது எதிரணிக் கட்டமைப்புக்குள் வரவுள்ளதால், தமிழ்த்தேசியக் கட்சிகள் இதற்கு இணங்குமா என்பது தெரியவரவில்லை.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் சஜித்தின் தலைமைப் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பொது எதிரணியில் தலைமைத்துவ சபையொன்றே உருவாக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.