இந்தியா
ரூ.3,500 கோடி மதுபான ஊழல்: லஞ்சம் பெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன்; சி.ஐ.டி விசாரணை

ரூ.3,500 கோடி மதுபான ஊழல்: லஞ்சம் பெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன்; சி.ஐ.டி விசாரணை
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், கடந்த 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு நடந்து வந்தது. அப்போது, மதுபான விற்பனையில் ரூ.3, 500 கோடி ஊழல் நடந்ததாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஆந்திரப் பிரதேச சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுபான ஊழலில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மே மாதம் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.இதனிடையே மதுபான ஊழலை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, நேற்று முன்தினம் சனிக்கிழமை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியிடம் பல மணி நேர விசாரணை மேற்கொண்டது. இதன்பிறகு அவரை கைது செய்தது. இதைத்தொடர்ந்து, விஜயவாடா நீதிமன்றத்தில் ஆந்திரப் பிரதேச சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக 305 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இந்நிலையில், ரூ.3,500 கோடி மதுபான ஊழல் தொடர்பாக ஆந்திரப் பிரதேச சி.ஐ.டி போலீசார் விசாரணையில், லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நபர்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டியும் ஒருவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்றாலும், அவர் மதுபான ஊழல் பணத்தை பெற்றதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.சில நிறுவனங்கள் மற்றும் சப்ளையர்களுக்கு சாதகமாக இருந்ததாகக் கூறப்படும் மதுபானக் கொள்கையின் காரணமாக, ஜூன் 2019 முதல் மே 2024 வரை ஒவ்வொரு மாதமும் ரூ.50-60 கோடி லஞ்சமாக பெறப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலு, முதல் குற்றவாளியாக காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். சி.ஐ.டி போலீசாரின் விசாரணையின்படி, லஞ்சப் பணம் முக்கிய குற்றவாளியான கேசிரெட்டி ராஜசேகர் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அவர் பணத்தை பல்வேறு ஷெல் நிறுவனங்களில் மாற்றியுள்ளார். பின்னர் அவற்றை மற்றவர்களுக்கு விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ராஜசேகர் ரெட்டி இந்தப் பணத்தை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்களுக்கும், மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் வி. விஜயசாய் ரெட்டி மற்றும் பி.வி. மிதுன் ரெட்டிக்கும் வழங்கியதாகவும், பின்னர் அவர்கள் அதை அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மாற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது, இதில் காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவர் ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னாள் ஐ.டி ஆலோசகராக இருந்துள்ளார். விஜயசாய் ரெட்டி முன்னாள் ராஜ்யசபா எம்.பி. ஆவார். மிதுன் ரெட்டி ராஜம்பேட்டையின் தற்போதைய மக்களவை எம்.பி-யாக இருந்து வருகிறார். போலீஸ் விசாரணையில் விஜயசாய் ரெட்டி மற்றும் மிதுன் ரெட்டி ஆகியோர் மதுபான கொள்கையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், தானியங்கி ஓ.எஃப்.எஸ்-ஐ (சப்ளை ஆர்டர்) கைமுறை செயல்முறை மூலம் மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்ததாகவும், ஆந்திர மாநில பானங்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் (APSBCL) இல் தங்களுக்கு விசுவாசமானவர்களை நியமித்ததாகவும் கூறப்படுகிறது. ராஜசேகர் ரெட்டி ஷெல் நிறுவனங்களை உருவாக்கி, மற்றொரு குற்றவாளியான பாலாஜி கோவிந்தப்பா மூலம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு லஞ்சப் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும், ராஜசேகர் ரெட்டி, மற்றொரு குற்றவாளியான முன்னாள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியுடன் இணைந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பாக தேர்தலுக்காக ரூ.250 முதல் ரூ.300 கோடி வரை பணத்தை அனுப்பியதாகவும், 30-க்கும் மேற்பட்ட ஷெல் நிறுவனங்கள் மூலம் நிதியை மோசடி செய்ததாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. துபாய் மற்றும் ஆப்பிரிக்காவில் நிலம், தங்கம், ஆடம்பர சொத்துக்களை வாங்குவதற்காக இந்த தொகை முதலீடு செய்யப்பட்டதாகவும், இந்த லஞ்சப் பணத்தில் குறைந்தது ரூ.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்திய முக்கிய குற்றவாளி மதுபான விநியோகம் மற்றும் விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக சி.ஐ.டி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை, தங்களுக்குச் சாதகமாக உள்ள மதுபான நிறுவனங்களிடமிருந்து அதிக கமிஷன்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுளள்து. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதுபானக் கொள்கையிலும் அதன் நடைமுறைகளிலும் மாற்றத்தைத் திட்டமிட்டுள்ளனர். இது அவர்கள் பெரிய அளவில் லஞ்சம் பெறுவதை உறுதி செய்துள்ளது. அத்தகைய லஞ்சப் பணத்தில் பெரும் பகுதி ரொக்கம், தங்கக் கட்டிகள் போன்றவற்றில் பெறப்பட்டது என்று விசாரணையில் கண்டறிந்துள்ளது.பழிவாங்கும் நடவடிக்கைஇந்நிலையில், மதுபான ஊழல் விவகாரத்தில் மூன்று முறை கட்சி எம்.பி.யாக இருந்த பி.வி. மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டதற்காக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அரசு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இந்த வழக்கு அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையைக் கண்டித்து, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா ரெட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், “இது மக்களுடன் நிற்பவர்களை மௌனமாக்க வடிவமைக்கப்பட்ட அரசியல் சதியைத் தவிர வேறில்லை. இது தெலுங்கு தேசம் அரசு தனது சொந்த மோசடிகள் மற்றும் தோல்விகளை மறைக்க திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் செயலாகும்” என்று கூறினார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மதுபான ஊழல் என்பது வெறும் கற்பனையான கதை, ஊடக நாடகத்திற்காகவும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் மட்டுமே உருவாக்கப்பட்டது. இந்த முழு வழக்கும் அழுத்தம், அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் லஞ்சம் மற்றும் தூண்டுதல்கள் மூலம் பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிதுன் ரெட்டி, கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்கள் மூலம் பொய்யாக சிக்க வைக்கப்பட்டுள்ளார். புனையப்பட்ட மதுபான ஊழலில் ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியாவிட்டாலும், மதுபான ஊழலில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் நோக்கில் கைதுகள் மேற்கொள்ளப்படுகிறது. மதுபான வியாபாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து பறித்து, அதை அரசாங்கத்தில் கொண்டு வந்து மதுபான விலைகளைக் குறைத்து ஒழுங்குபடுத்தினார். அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடு மதுபான நடவடிக்கைகளை தனியார் கைகளில் விட்டுவிட்டார். இது ஊழலுக்கு அதிக வாய்ப்புள்ளது, மேலும் அவர் தன்னை சார்ந்தவர்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்குவதன் மூலம் சாதகமாக இருக்கிறார்” என்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா ரெட்டி குற்றம் சாட்டினார்.