பொழுதுபோக்கு
9 டூ 5 வேலை, சண்டே லீவு; சினிமாவில் இதை செய்த முதல் நடிகை நான் தான்: புதிய பாதை கொடுத்த கே.ஆர்.விஜயா!

9 டூ 5 வேலை, சண்டே லீவு; சினிமாவில் இதை செய்த முதல் நடிகை நான் தான்: புதிய பாதை கொடுத்த கே.ஆர்.விஜயா!
நடிகை கே.ஆர்.விஜயா தனது திரைப்பட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து இண்டியாக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கே.ஆர்.விஜயா இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். “புன்னகை அரசி” என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், தனது தனித்துவமான நடிப்பாலும், எளிமையான குணத்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் அவர் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணங்கள் குறித்து தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு படவாய்ப்புகள் இருந்தபோதிலும் குழந்தை பிறந்தபோது மூன்று, நான்கு மாதங்கள் படப்பிடிப்புகளுக்கு இடைவெளி ஏற்பட்டதாக தெரிவித்தார். அந்த நேரத்தில், தனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தாராம். ஆனால், அவரது கணவர், “கடவுள் கொடுத்தது ஒரு தொழில், அதை நீ புறக்கணிக்காதே. உன்னால் முடியும் வரை செய்” என்று கூறி நடிக்கும்படி ஊக்கப்படுத்தியுள்ளார்.1967 அல்லது 1968 ஆம் ஆண்டில் ஒரே வருடத்தில் 18 படங்களில் கே.ஆர்.விஜயா நடித்திருக்கிறார். இது அவருக்கு நினைவில் இல்லை என்றாலும், ஹேமா பிறந்த சமயத்தில் இது நடந்திருக்கலாம் என்று கூறுகிறார். படப்பிடிப்புக்கு எந்த ஒரு குறிப்பிட்ட அட்டவணையும் இல்லை என்றும், மேலாளர்கள் இருந்தாலும், அவரே தேதிகள் கொடுத்து படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். சில படங்கள் சீக்கிரம் முடிந்ததாம், சிலது முடியவில்லை.பஞ்சவர்ணக் கிளி என்ற படத்தில் கால்ஷீட் கொடுக்காமலேயே நடித்து முடித்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போது தான் மிகவும் பிசியாக இருந்ததால், வேலுமணி சார், “எங்கெங்கு சீக்கிரமாக முடியுமோ, அங்கே ஒரு போன் செய்து வந்து நடித்துவிட்டு போ” என்று கூறினாராம். இதனால், காலை 3 மணிக்கு சீன் முடிந்துவிட்டால், உடனே அடுத்த படப்பிடிப்புக்குச் சென்று நடித்துவிட்டு, 8 மணிக்குள் திரும்புவாராம். இப்படித்தான் கால்ஷீட் கொடுக்காமல் அந்த முழு படத்தையும் முடித்திருக்கிறார். இதனால்தான் இவ்வளவு படங்கள் பண்ண முடிந்தது என்றும் கூறினார்.தனது கணவர் தான், சினிமா துறையில் 9 டூ 5 வேலை மற்றும் ஞாயிறு விடுமுறை என்ற முறையை முதன்முதலில் கொண்டுவந்தவர் என்று பெருமையுடன் கூறுகிறார். “பல பெண்கள் அலுவலகத்தில் வேலை செய்யவில்லையா? காலையில் 9 மணிக்குச் சென்றால், மாலையில் 5-6 மணிக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், சினிமாவில் அப்படி செய்ய முடியாதே” என்று அவர் கேட்டபோது, “செய்யணும். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்” என்று கணவர் கூறியிருக்கிறார். அவர்தான் இந்த மாற்றத்தை திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறார்.இந்த மாற்றத்தைக் கண்ட நடிகர் சிவாஜி கணேசன் ஒருமுறை கே.ஆர்.விஜயா வீட்டுக்கு வந்திருந்தபோது, “ஓ, இதற்காகத்தான் நீ சீக்கிரம் வீட்டுக்கு வருகிறாயா? உனக்கு இங்கே முழு வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, “சரி, அவளை சீக்கிரம் விடுங்கள்” என்று படக்குழுவிடம் கூறினாராம். ஆரம்பத்தில் இந்த முறை சற்று கடினமாக இருந்தாலும், பின்னர் அனைவரும் இதற்குப் பழகிக் கொண்டார்கள். யாராவது புகழ்ந்தால் உடனே சந்தோஷப்படுவதோ, யாராவது வருத்தமாகப் பேசினால் தாழ்ந்து போவதோ இல்லை என்றும், “நாம் எப்பவும் நம்மளாகவே இருந்துவிட்டுப் போய்விடுவோம்” என்ற அணுகுமுறையிலேயே வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார்.தனது முன்னேற்றத்திற்குக் காரணம், தனக்குக் கிடைத்த இயக்குநர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பின்னணிக் குரல் கொடுத்தவர்கள் தான் என்று கூறி அவர்களுக்கு நன்றி செலுத்துகிறார். கே.ஆர்.விஜயா தனது வாழ்க்கையை திருப்தியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அவரது வீட்டை ஒரு ‘கோவில்’ போல இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.