இலங்கை
அரசியல் பேசுபொருளாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; சரத் வீரசேகர தெரிவிப்பு!

அரசியல் பேசுபொருளாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; சரத் வீரசேகர தெரிவிப்பு!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஐஸ்மின் உயிரிழந்துவிட்டார். அவர் இந்தியாவுக்குத் தப்பியோடவில்லை. நிலைமை இப்படி இருக்கையில் குறித்த சம்பவம் தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- டி.என்.ஏ. பரிசோதனைக்காக முதன்முதலில் 21 மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. சாரா ஜஸ்மினின் டி.என்.ஏ. மாதிரியுடன் பொருந்தவில்லை. 11 மாதிரிகள் காலாவதியானதால் அவை மீளப்பெறப்பட்டன. இதன்போதும் முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில் சாரா ஜஸ்மின் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார் எனக் கதை பரப்பப்பட்டது. இது உண்மைக்குப் புறம்பான தகவல் என்பது உறுதியானது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் அரசியலாக்கப்பட்டுள்ளது. யாரின் தேவைக்காக இவ்வாறு செய்யப்படுகின்றது எனத் தெரியவில்லை. சஹ்ரான் மற்றும் நௌபர் மௌலவி ஆகியோரே பிரதான சூத்திரதாரிகளாவார்கள். நிலைமை இவ்வாறு இருக்க விசாரணையைத் திசை திருப்புவதற்காகவே மக்கள் மத்தியில் மாற்றுக் கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன” – என்றார்.