இலங்கை
இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வு; வாக்குறுதிகளை நிறைவேற்றுக! அஜித் பி பெரேரா தெரிவிப்பு

இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வு; வாக்குறுதிகளை நிறைவேற்றுக! அஜித் பி பெரேரா தெரிவிப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியற்தீர்வு, புதிய அரசியலமைப்பு என்பன தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என தனது ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனத்தில் அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். விரைவில் அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றெல்லாம் உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. எனினும், புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவர் தற்போது ஒரு வசனம் கூட கதைப்பதில்லை. குறைந்தபட்சம் எப்போது இதற்குரிய பணி ஆரம்பமாகும். எப்போது நிறைவுபெறும் என்பது தொடர்பில் கூட கருத்துத் தெரிவிப்பதில்லை. இதன்மூலம் நாட்டில் அரசியற் கலாசாரத்தை மாற்றுவதற்கு இருந்த வாய்ப்பை அவர் இல்லாமல் செய்து வருகின்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்து அதிகாரத்தைச் சுவைத்து வருகின்றார். அதற்கு அப்பால் சென்று, அரசியலமைப்பு மறுசீரமைப்பைச் செய்வதற்கும் அவர் தயாரில்லை என்பது தெரிகின்றது.
மேற்படி உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாதுள்ள சூழ்நிலையில் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மையை இல்லாது செய்வதற்கும். அரசியலமைப்பு சபையின் அதிகாரத்தைக் குறைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செய்யப்ப டவுள்ளது எனவும் கூறப்படுகின்றது. இது பாரதூரமான விடயமாகும். புதிய அரசியலமைப்பு எனக்கூறிவிட்டு, மக்கள் ஆணையை மீறும் வகையில் அரசாங்கத்தின் அணுகுமுறைகள் 6 உள்ளன – என்றார்.