பொழுதுபோக்கு
ஏ.கே இருக்கும் போது ஏ.ஐ எதுக்கு? யங் அஜித் வந்தது இப்படி தான்; ஆதிக் உடைத்த ரகசியம்!

ஏ.கே இருக்கும் போது ஏ.ஐ எதுக்கு? யங் அஜித் வந்தது இப்படி தான்; ஆதிக் உடைத்த ரகசியம்!
குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக வெளிவந்த இதில் அஜித்குமார், திரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் தாஸ், சுனில், பிரபு, பிரசன்னா போன்ற பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் அஜித் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அவரது வெவ்வேறு தோற்றங்கள் பற்றிய பேச்சுக்கள், வெளியான நாள் முதலே சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டன.இந்நிலையில் குட் பேட் அக்லியில் அஜித் குமாரின் தோற்றம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பிஹைண்ட்வுட்ஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பின்போது, நடிகர் அஜித் குமார் தனது ரேஸ் பயிற்சிக்காக படிப்படியாக உடல் எடையைக் குறைத்து வந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட காட்சியைப் படமாக்கத் தயாரானபோது, அஜித்தின் எடை குறைப்பைக் கண்டு படக்குழுவினர் ஆச்சரியமடைந்துள்ளனர்.இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன், “சாரோட வெயிட் லாஸ் பார்த்துட்டு நம்ம என்ன பண்ணோம்னா சார் கிட்ட சார் இந்த போர்ஷன் மட்டும் கடைசியா ஷூட் பண்ணிக்கிறேன்” என்று கூறியுள்ளார். அஜித் ஒரு நாள் ஒரு வேளை உணவு, திடீர் விரதம் என ரேஸ் பயிற்சிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அஜித்தின் அர்ப்பணிப்பைக் கண்ட இயக்குநர், அஜித்தின் தோற்றம் மேலும் மெருகேறி வருவதை உணர்ந்துள்ளார். “ஒரு அழகு எப்பவுமே ஒரு அழகுதான். பட் போக போக பயங்கர அழகா ஆயிட்டு வராரு. கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்னு சொல்லி கடைசியா வெயிட் பண்ணி அந்த ஃபிளாஷ்பேக் ஷாட்ஸ் ஃபுல்லா எடுத்தோம்” என்று ஆதிக் விளக்கினார்.மிக முக்கியமாக, இந்த ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அஜித்தின் ‘யங் லுக்’ தோற்றத்திற்காக எந்தவிதமான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவில்லை என்பதை ஆதிக் ரவிச்சந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “அதுல ஏ.ஐ நாங்க எதுவுமே யூஸ் பண்ணல என்றும் பிளாக் பண்ணி அப்படி சார ஷூட் பண்ணோம்” என்று அவர் உறுதிப்படுத்தினார்.இதன் மூலம், அஜித்தின் இளமையான தோற்றம் அவரது ரேஸ் பயிற்சி மற்றும் இயற்கையான உடல் மாற்றத்தாலேயே சாத்தியமானது என்பது தெளிவாகிறது. ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவி இல்லாமல், அஜித்தின் கடின உழைப்பும் அர்ப்பணிப்புமே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்பதை ஆதிக் ரவிச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.