இலங்கை
தேசபந்து தென்னகோன் குற்றவாளி ; பதவியில் இருந்து நீக்க பரிந்துரை

தேசபந்து தென்னகோன் குற்றவாளி ; பதவியில் இருந்து நீக்க பரிந்துரை
இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதேவேளை, குறித்த அறிக்கையை அச்சிட்டு பாராளுமன்ற இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை தயாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன குழுவின் தலைவராக பணியாற்றினார்.
நீதிபதி நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏகநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாகப் பணியாற்றினர்.
இந்த விசாரணைக் குழு 10 தடவைகளுக்கு மேல் கூடி, சாட்சியங்களைச் சேகரித்து 2025 ஜூலை 16 முதல் தினமும் கூடி, சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது.
இதன்படி, விசாரணைக் குழுவின் சாட்சியப் பதிவு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, குழுவின் விசாரணை அறிக்கை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்பட்டு, தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.