இலங்கை
நாட்டிலிருந்து வெளியேறும் அதிகளவான மருத்துவர்கள்!!

நாட்டிலிருந்து வெளியேறும் அதிகளவான மருத்துவர்கள்!!
கடந்த மூன்று ஆண்டுகளில் நிபுணர்கள் உட்பட ஆயிரத்து 489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அதிக எண்ணிக்கையான மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியமை சுகாதார உட்கட்டமைப்பைச் சீர்குலைத்து, நிபுணர்களின் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது என்றும், மருத்துவர்களின் வெளியேற்றத்தால் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பிரதேசங்கள் பெரிதும் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
நாட்டின் சுகாதாரப் பணியாளர்களில் தற்போது 23 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளனர் என்றும், அவர்களில் 2 ஆயிரத்து 800 பேர் நிபுணர்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வுக்காக பெறப்பட்ட தரவுகளின்படி, 2022 முதல் 2024 வரையான மூன்று ஆண்டுகளில் ஆயிரத்து 85 மருத்துவர்கள் வெளிநாடுகளில்
சிறப்புப் பயிற்சி பெற்றுவருகின்றனர். அவர்களில் 2022 ஆம் ஆண்டு 477 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். சிறப்புப் பயிற்சிபெறும் ஆயிரத்து 85 மருத்துவர்களில் 20 சதவீதம் பேர், முதுகலை சான்றிதழ்களைப் பெற்ற பின்னரும் நாடு திரும்பவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.