இலங்கை
மருந்து இல்லா நிலைக்கு தீர்வு!

மருந்து இல்லா நிலைக்கு தீர்வு!
அரச மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாத சந்தர்ப்பங்களில், அவை வெளியிலிருந்து பெறப்பட வேண்டும் என்ற தேவைக்கு ஏற்ப வழிகாட்டுதல்களுடன் கூடிய சுற்றறிக்கையை சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருப்பது, ஒரு நேர்மறையான நடவடிக்கை என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் மற்றும் சிறப்பு வைத்தியர் ஷிரந்த பெரேரா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்க இவ்வாறான வழிகாட்டுதல்கள் மிக அவசியமானவை என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த பரிந்துரைகள் ஆய்வில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியில் வாங்கப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் பொறுப்பு மருத்துவர்களின் மீது இருப்பதாகவும், அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவது முக்கியமானதாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்குப் பின்னணியாக, மருத்துவர்கள் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் இந்த புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மருத்துவமனைகளிலோ அல்லது மருத்துவ உபகரண விநியோகப் பிரிவிலோ மருந்துகள் கிடைக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின், நிறுவனத் தலைவரின் ஒப்புதலுடனும், நோயாளியின் சுய ஒப்புதலுடனும் வெளியிலிருந்து மருந்துகள் வாங்கப்படும் வகையில் வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.