இலங்கை
ஹருண பதவி நீக்கப்பட்டாலே நீதியான விசாரணை நடக்கும்; வலியுறுத்துகின்றது ஐ.ம.சக்தி

ஹருண பதவி நீக்கப்பட்டாலே நீதியான விசாரணை நடக்கும்; வலியுறுத்துகின்றது ஐ.ம.சக்தி
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிப்படையான சுயாதீன விசாரணை இடம்பெற வேண்டுமெனில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஹருண ஜயசேகர உடன் பதவி நீக்கப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்துடன் இந்த நாட்டிலுள்ள புலனாய்வுப்பிரிவின் சிறிய குழுவொன்று தொடர்புபட்டுள்ளது என்பதை பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஹருண ஜயசேகர நாடாளுமன்றத்தில் ஏற்றுள்ளார். இந்தக் குழுவினர் யார்? அவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர்?
சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் சாரா கொல்லப்படவில்லை என்பது ஹாதியாவின் வாக்குமூலம் ஊடாக உறுதியாகின்றது. ஹருண ஜயசேகர கிழக்குக் கட்டளைத் தளபதியாக பதவி வகிக்கும் காலப்பகுதியில் தான் இந்தச்சம்பவம் இடம்பெற்றது. அதனால் சஹ்ரான் குழு இருக்கும் இடத்துக்கு முதலில் வந்த இராணுவக்குழு எது என்பது ஹருண ஜயசேகரவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்தக் குழுதான் சாராவை வெளியேற்றி இருக்கவேண்டும்.
சம்பவம் நடக்கும்போது ஹருணஜயசேகர பதவியில் இருந்துள்ளார். தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அன்று எதிரணியில் இருந்தவர். அவரைப் பதவி விலகுமாறு கோர முடியாது. எனவே பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஹருண ஜயசேகர பதவிவிலக வேண்டும். அவரை விலக்காமல் சுயாதீன விசாரணையை எதிர்பார்க்க முடியாது- என்றார்.