இலங்கை
1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!
இலங்கையில் இருந்து 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில், நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார உள்கட்டமைப்பை சீர்குலைத்து, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் நிபுணர்களின் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
இது வைத்தியக் கல்வியையும், அனைவருக்கும் சுகாதார சேவைகளை சமமாக அணுகுவதற்கான உரிமையையும் பாதித்துள்ளது என்றும் கூறுகிறது.
அதேவேளை இலங்கை வைத்தியர்கள் இடம்பெயர்ந்த நாடுகளையும் குழு ஆய்வு செய்து,
கடந்த ஆண்டு இறுதிக்குள் பிரிட்டனில் தேசிய சுகாதார சேவை மற்றும் சமூக சுகாதார சேவைகளில் பணிபுரியும் இலங்கையர்களின் எண்ணிக்கை 121 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டியது.
ஆய்வின்படி, கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் 3,082 இலங்கை வைத்தியர்கள் பணிபுரிந்தனர், இதில் 391 மூத்த நிபுணர்கள் மற்றும் 413 நிபுணர்கள் அடங்குவர்.
அதேசமயம் , 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், ஆஸ்திரேலியாவிற்கு அதிக எண்ணிக்கையிலான வைத்திய நிபுணர்கள் குடிபெயர்ந்த 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.