பொழுதுபோக்கு
ஆட்டோ டிரைவர் மகன்; அப்போலாம் ரூ. 3 தான் கிடைக்கும், இப்போ எனக்குன்னு சில பேர் இருக்காங்க: ஸ்ரீதர் மாஸ்டர் உருக்கம்!

ஆட்டோ டிரைவர் மகன்; அப்போலாம் ரூ. 3 தான் கிடைக்கும், இப்போ எனக்குன்னு சில பேர் இருக்காங்க: ஸ்ரீதர் மாஸ்டர் உருக்கம்!
டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும், அதற்கு கலா மாஸ்டர் எந்த அளவிற்கு உதவியாக இருந்தார் என்றும் பல்வேறு விஷயங்களை உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார். சமீபத்தில் கலா மாஸ்டரின் 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கௌரவிக்கும் விதமாக சினி உலகம் யூடியூப் சேனல் சார்பில் விழா நடத்தப்பட்டது.இந்த விழாவில் கலா மாஸ்டருடன் இணைந்து பணியாற்றிய சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், ஸ்ரீதர் மாஸ்டரும் சினிமாவில் தான் கடந்து வந்த பாதை, அதில் கலா மாஸ்டரின் பங்களிப்பு போன்று பல தகவல்களை கூறினார்.அதன்படி, “கலா மாஸ்டருக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது இருக்கும் பலருக்கு நான் பிரபுதேவா மற்றும் ராஜூ சுந்தரம் ஆகியோரது குழுவில் பணியாற்றியது தெரியும். ஆனால், இவை அனைத்திற்கும் மேலாக கலா மாஸ்டர் இல்லையென்றால், நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது என்பதே நிதர்சனம்.கல்லூரி காலங்களில் நடன போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். அப்போது, ஜெயந்தி மாஸ்டர் என்பவருடைய குழுவில் இணைந்தேன். அவர் தான் கலா மற்றும் பிருந்தா மாஸ்டர்களிடம் என்னை அறிமுகம் செய்தார். ஒரு நிகழ்ச்சியில் என்னை தனியாக ஆட வைத்து அழகு பார்த்தவர் கலா மாஸ்டர் தான். அதற்காகவே, கலா மாஸ்டருக்கு நான் நன்றி கூற வேண்டும்.முதன்முதலில் நான் துபாய்க்கு செல்ல இருந்த போது, எனக்கு பாஸ்போர்ட் எடுக்க வைத்தது கலா மாஸ்டர் தான். சினிமாவில் உறுப்பினர் அட்டை பெறுவதற்கு ரூ. 50 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் என்னிடம் ரூ. 150 மதிப்புள்ள சைக்கிள் மட்டுமே இருந்தது. அப்போது எனக்காக சிபாரிசு செய்தது கலா மாஸ்டர் தான். அதனை என்றுமே மறக்க மாட்டேன். இப்படி ஒவ்வொரு முயற்சியாக மேற்கொண்டு இன்று உங்கள் முன்னால் ஸ்ரீதர் மாஸ்டராக இருக்கிறேன்.என்னுடைய தந்தை ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார். அப்போது, அந்த ஆட்டோவை கழுவினால் எனக்கு ரூ. 3 கொடுப்பார்கள். இந்த அளவிற்கு கஷ்டத்தில் இருந்த எனக்கு, மிகப்பெரிய பல விஷயங்களை காண்பித்தது கலா மாஸ்டர் தான்” என ஸ்ரீதர் மாஸ்டர் உருக்கமாக பேசினார்.