வணிகம்
மினிமம் பேலன்ஸ் தேவையில்லை… வங்கிகளின் முடிவுக்கு இதுதான் காரணம்: ஆனந்த் சீனிவாசன்

மினிமம் பேலன்ஸ் தேவையில்லை… வங்கிகளின் முடிவுக்கு இதுதான் காரணம்: ஆனந்த் சீனிவாசன்
சராசரி மாதாந்திர இருப்பு என்பது ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பு தொகையாகும். இந்தத் தொகை தேவையான அளவை விடக் குறைந்தால், வங்கிகள் அபராதம் விதிப்பது வழக்கம். இந்த அபராதம் சேமிப்பு கணக்கின் வகையை பொறுத்து மாறுபடும்.இந்த சூழலில், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பொதுத் துறை வங்கிகள், இந்த விதிமுறையை தளர்த்தி உள்ளன. வாடிக்கையாளர் சேவையில் முன்னேற்ற காணும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வங்கிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கிகளின் இந்த அதிரடி முடிவுக்கான காரணத்தை பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளார். இது குறித்த தகவல்களை மக்கள் பேச்சு என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதில், “சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி பெறப்பட்டதாக வங்கிகள் தரப்பில் இருந்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. தென்னிந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகள் நகர்ப்புறமாக மாறி வருகிறது. அந்த வகையில் நிறைய தனியார் துறை வங்கிகளின் கிளைகள் ஏராளமான பகுதிகளில் தொடங்கப்பட்டு விட்டன. இதனால், சுமார் 50 வயதுக்கு கீழ் இருக்கும் நபர்கள், பெரும்பாலும் பொதுத் துறை வங்கிகளுக்கு செல்வதில்லை. கடன் பெறுவதற்கு பொதுத் துறை வங்கிகளை நாடுகின்ற பலரும் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகுவதில்லை. அதற்கு மாற்றாக தனியார் துறை வங்கிகளில் இந்த நடைமுறைகளை மேற்கொள்ள விரும்புகின்றனர். மேலும், பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் தாமதமாக நடைபெறுவதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.ஆனால், இன்றைய சூழலில் ஒரு ஃபோன் கால் மூலமாகவே தனியார் துறை வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்கி பராமரிக்க முடியும். பொதுத் துறை வங்கியின் செயலிகளை பயன்படுத்துவதற்கு கடினமாக இருக்கிறது. இப்படி பல்வேறு காரணங்களால், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியோர், தங்கள் முதலீடுகளை தனியார் துறை வங்கிகளில் மேற்கொள்கின்றனர். எனவே, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையை பராமரிக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது” என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.