பொழுதுபோக்கு
ரஜினி முதல் சிவராஜ்குமார் வரை; வீடு முழுக்க போட்டோ, மு.க. ஸ்டாலினுக்கே நான் வில்லன்: தளபதி தினேஷ் ஹோம்டூர் வைரல்!

ரஜினி முதல் சிவராஜ்குமார் வரை; வீடு முழுக்க போட்டோ, மு.க. ஸ்டாலினுக்கே நான் வில்லன்: தளபதி தினேஷ் ஹோம்டூர் வைரல்!
தமிழ் சினிமாவில் முன்னணி ஃபைட் மாஸ்டர்களில் ஒருவராக தளபதி தினேஷ் திகழ்கிறார். இவரது ஹோம் டூர் சமீபத்தில் சினி உலகம் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், தன்னுடைய சினிமா பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மு.க. ஸ்டாலின் நடித்த ஒரு தொடரில் வில்லனாக பணியாற்றிய நிகழ்வையும் அவர் நினைவு கூர்ந்தார்.அதன்படி, “நான் பிறக்கும் போதே என்னுடைய தந்தை இறந்து விட்டார். நான் வீட்டிற்கு ஒரே பையன். அம்மா தான் வீட்டு வேலை செய்து என்னை காப்பாற்றினார். என்னுடைய அம்மாவை மிகவும் பிடிக்கும். இதன் காரணத்தினால் வீட்டிற்கு அம்மாவின் பெயரை வைத்துள்ளேன்.இந்த, மூன்று மாடி வீட்டில் என் அம்மா, மனைவி, மகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் வசிக்கிறோம். வீடு முழுவதும் நான் இணைந்து பணியாற்றிய பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நிறைந்திருக்கும். ரஜினிகாந்த் முதல் சிவராஜ்குமார் வரை பலருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீட்டை அலங்கரிக்கின்றன. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடமிருந்து தமிழ்நாடு அரசு விருதுகள் வாங்கி இருக்கிறேன். இதேபோல், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமாராவ்-விடம் இருந்தும் விருது வாங்கியுள்ளேன். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தின் போது கலைமாமணி விருது பெற்றேன். இது போல் பல அமைப்பினரிடம் இருந்து பெற்ற விருதுகளை அடுக்கி வைப்பதற்கு வீட்டில் இடம் இல்லை.நான் சினிமாவில் நுழைந்த தருணத்தில் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆகி விட்டார். இதனால், அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் மட்டும் இருக்கிறது. ‘அசல்’ திரைப்படத்தில் நான் ஃபைட் மாஸ்டராக பணியாற்றினேன். அப்போது, என் மகன் என்னிடம் உதவியாளராக பணியாற்றினார். அந்த நேரத்தில் அஜித்துக்கு டூப் போட்டது என் மகன் தான்.’சந்திரமுகி’ திரைப்படத்தில் பணியாற்றிய போது என் தாயாரை முதன்முதலாக விமானத்தில் அழைத்துச் சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைத்தேன். அப்போது, ரஜினிகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. ‘தளபதி’ படத்தில் என்னுடைய வேலையை பார்த்த சிரஞ்சீவி, அவரது படத்தில் நான் பணியாற்ற வேண்டும் என்று அழைத்தார். இது போல் பல விஷயங்கள் உள்ளன.எத்தனையோ படங்களில் பணியாற்றி இருந்தாலும் எனக்கு அடையாளம் கொடுத்தது ‘தளபதி’ திரைப்படம் தான். தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னர் ஒரு சீரியலில் ஹீரோவாக நடித்தார். அதில் வில்லனாக நான் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது” என்று ஃபைட் மாஸ்டர் தளபதி தினேஷ் தெரிவித்துள்ளார்.