வணிகம்
எகிறும் தங்கம் விலை… ஒரு கிராம் ரூ. 10,000 தொடுமா? ஆனந்த் சீனிவாசன் விளக்கம்

எகிறும் தங்கம் விலை… ஒரு கிராம் ரூ. 10,000 தொடுமா? ஆனந்த் சீனிவாசன் விளக்கம்
இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்குவது என்பதே சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி இருக்கிறது. ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால், நகையாக வாங்குபவர்கள் மட்டுமின்றி அதனை முதலீடாக பார்ப்பவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்த வகையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரும் சூழலில், அதற்கான காரணத்தை பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், மக்கள் பேச்சு என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.அதன்படி, “தங்கத்தின் விலை இப்போது உயர்வாக காணப்படுகிறது. அமெரிக்க டாலர் நிலவரப்படி இந்த நிலை இன்னும் 5 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 9,380 என்ற நிலையில் இருக்கிறது. ஜி.எஸ்.டி, ஸ்டாம்பிங் சார்ஜ் இரண்டு சதவீதம் ஆகியவற்றை இத்துடன் சேர்த்தால் ஒரு கிராம் 22 கேரட் தங்க நாணயம் வாங்க வேண்டுமென்றால் ரூ. 9.855 என்ற அளவில் இருக்கும்.சராசரியாக ரூ. 10 ஆயிரத்தை தொடுகிறது. இதுவே நகையாக வாங்கும் போது ஒரு கிராம் தங்கம் ரூ. 11,207-க்கு 22 கேரட் விற்பனை செய்யப்படுகிறது. வணிகத்தை பொறுத்தவரை டிரம்பின் இதே நிலைப்பாடு தொடர்ந்தால், ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10 ஆயிரத்தை நெருங்கும் வாய்ப்பு இருக்கிறது. டிரம்ப் பதவியேற்ற போது, ஒரு சவரன் தங்கத்தின் விலை சராசரியாக ரூ. 50 ஆயிரத்தில் இருந்தது. இப்போது, ரூ. 75 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது.டிரம்பின் கொள்கைகள் டாலர் மதிப்பை பலவீனமாக மாற்றி வருகிறது. டாலர் மதிப்பு பலவீனமாகும் போது, தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக டாலர் மதிப்பு பலவீனமான காரணத்தினால், தங்கத்தின் விலை இந்த அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. அப்படி பார்க்கும் போது, இப்போதைய நிலையின்படி அடுத்த 18 மாதங்களில் இன்னும் 15 சதவீதம் வரை விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது” என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.