பொழுதுபோக்கு
என் திரைக்கதை எல்லாம் சும்மா; இவர்தான் அதில் மாஸ்டர்: பெயர் தெரியாத எம்.ஜி.ஆர் படத்தை சொன்ன பாக்யராஜ்!

என் திரைக்கதை எல்லாம் சும்மா; இவர்தான் அதில் மாஸ்டர்: பெயர் தெரியாத எம்.ஜி.ஆர் படத்தை சொன்ன பாக்யராஜ்!
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் தனக்கு பிடித்தமான சண்டைக் காட்சிகள் குறித்து இயக்குநர் பாக்யராஜ் விவரித்துள்ளார். குறிப்பாக, இவை ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவை பொறுத்தவரை, சிறந்த திரைக்கதையாசிரியர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் இயக்குநர் பாகயராஜின் பெயர் முதன்மையான இடத்தை பெறும். அந்த அளவிற்கு சினிமா ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படும் சினிமா ஆளுமையாக பாக்யராஜ் விளங்குகிறார்.சினிமா தொடர்பான படிப்புகளில் பாக்யராஜின் திரைக்கதைகளை பாடமாக சேர்க்கலாம் என்று பல சினிமா விமர்சகர்கள் இயக்குநர் பாக்யராஜுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். இவ்வளவு பெருமைகள் கொண்ட பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில், எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள், எவ்வாறு ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் அமைந்தன என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இவற்றில் தனக்கு பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் அதில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, “தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமையான விஷயங்களை எம்.ஜி.ஆர் செய்வார். இதற்கு ‘அன்பே வா’ திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் உள்பட பலவற்றை உதாரணமாக கூற முடியும். இதேபோன்று ஒரு படத்தின் சண்டைக் காட்சியில், கைகளில் ஆப்பிள் பழம் வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர் சண்டையிடுவார். அப்போது, எதிரே சண்டையிடும் நபர், எம்.ஜி.ஆரை கத்தியால் குத்தியதை போன்று தெரியும். ஆனால், ஆப்பிளில் தான் கத்தி இறங்கி இருக்கும். இது போன்று அவரது சண்டைக் காட்சிகளை சுவாரஸ்யமாக வடிவமைத்திருப்பார்கள்.அவருடைய படங்களை பார்க்கும் போது, என்னுடைய திரைக்கதைகள் மிக சாதாரணம் என்று நான் உணர்ந்திருக்கிறேன். 1960-ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா தெசிங்கு’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதில், ஒரு எம்.ஜி.ஆரை கொல்வதற்காக, இன்னொரு எம்.ஜி.ஆரை அழைத்து வருவார்கள். இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியில், ஒரு எம்.ஜி.ஆர் மீது ஈட்டியை வீசி கொல்வதற்காக இன்னொரு எம்.ஜி.ஆர் காத்திருப்பார். ஆனால், அவர் சண்டையிடும் திறனை பார்த்த மற்றொரு எம்.ஜி.ஆர், இப்படி ஒரு வீரனுடன் நேருக்கு நேர் சண்டையிட வேண்டும் என்று கூறுவார். இதைக் கேட்ட ரசிகர்கள், திரையரங்கில் ஆர்ப்பரித்து கொண்டாடினார்கள்” என இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.