இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று ஐந்து என்புத்தொகுதிகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று ஐந்து என்புத்தொகுதிகள்
இதுவரை 85 என்புத்தொகுதிகள் அடையாளம்
அரியாலை – செம்மணிப் புதைகுழியில் நேற்று 5 மனித என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து, இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணிப் மனிதப்புதைகுழியின் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன. இதன்போதே, புதிதாக ஐந்து என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன கடந்த மூன்று நாள்களில் மட்டும் 20 மனித என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சிரேஷ்ட சட்டத்தரணிகளான ரணித்தா, சட்டத்தரணி நிறஞ்சன், யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் குமாரவடிவேல் குருபரன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோர் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.