இலங்கை
தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிகின்றன – யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு!

தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிகின்றன – யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு!
தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது. பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் புராதன சின்னங்கள் அவற்றை விட்டு அகன்றுபோகின்ற தன்மையும் காணப்படுகிறது என யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தொல்லியல் திணைக்களத்தின் 135ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ். கோட்டை வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (23) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எமது வரலாற்றுத் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். தொல்லியல் மையங்கள் சுற்றுலாத்துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும்போது மக்கள் இது தொடர்பில் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.
மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறான நிலையில் புராதன சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது.
மரபுரிமையுடனான சுற்றுலா மேம்பாட்டுக்கு அமைய, எமது பழைய கச்சேரியினை உலக வங்கியின் அனுசரணையில் புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய பங்கு பல்வேறுபட்ட விடயங்களில் கிடைத்து வருகிறது.
எனவே, எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.