இலங்கை
தவறான தகவல் வெளியிட்ட பிமல் பதவி விலகவேண்டும்; வலியுறுத்துகின்றார் கம்மன்பில

தவறான தகவல் வெளியிட்ட பிமல் பதவி விலகவேண்டும்; வலியுறுத்துகின்றார் கம்மன்பில
அருட்தந்தை சிறில்காமினி பெர்னாண்டோ கூறுவது உண்மையெனில் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவி விலக வேண்டும் என்று பிவிருதுஹெல உறுமயக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- பேராயரின் கோரிக்கைக்கு அமையவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டார் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 7 மாதங்களுக்கு முன்னர் நான் தெரிவித்த கருத்தையே அமைச்சர் வெளிப்படுத்தி இருந்தார். அதற்காக அவருக்கு நன்றிகள். ஆயினும் அவ்வாறு கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை என கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அப்படியானால் பேராயர் தொடர்பில் தவறான தகவலை வெளியிட்டுச் சபையைத் தவறாக வழிநடத்தியமைக்காக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பதவி விலகவேண்டும்.
சிலவேளை பிமல் ரத்நாயக்க கூறுவது உண்மையெனில் தவறான தகவலை சமூகமயப்படுத்தியதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ பதவி விலக வேண்டும். எது எப்படி இருந்தாலும் இருவரில் ஒருவர் கூறுவது தான் உண்மையாக இருக்கமுடியும்- என்றார்.