பொழுதுபோக்கு
நன்றி கார்டு போட்டது குத்தமா? அதுக்குத்தான் இளையராஜா காசு கேட்கிறார்: உண்மையை உடைத்த வனிதா!

நன்றி கார்டு போட்டது குத்தமா? அதுக்குத்தான் இளையராஜா காசு கேட்கிறார்: உண்மையை உடைத்த வனிதா!
காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா மீது வனிதா விஜயகுமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், இது போன்ற செயல்கள் நிச்சயம் இளையராஜாவிற்கு பெருமை சேர்க்காது என்று அவர் விமர்சித்துள்ளார்.வனிதா விஜயகுமார் இயக்கி, நாயகியாக நடித்த ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பாடலை தன்னுடைய அனுமதி இன்றி பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.இது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், “இளையராஜா Vs வனிதா விஜயகுமார் என்று கூறுவதை நினைத்து வருத்தம் அடைவதா அல்லது பெருமை கொள்வதா? என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு அருகில் எனது பெயர் வருவதை பாக்கியமாக பார்க்கிறேன். சிறுவயதில் இருந்தே அவரை இசை கடவுளாக நான் பார்த்து வருகிறேன். எதிர்பாராத விதமாக இப்படி ஒரு நிலை உருவாகி இருக்கிறது.எனக்கும், இளையராஜாவிற்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. அவர் இசையமைத்த பாடலை, சோனி நிறுவனத்திடம் இருந்து முறைப்படி பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து, எனது படத்தில் பயன்படுத்தினேன். இதில் சோனி நிறுவனத்திடம் தான் இளையராஜா கேள்வி எழுப்ப வேண்டும். அப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்த காரணத்தினால், அவருக்கு நன்றி கூறி கார்டு போட்டோம்.இவ்வாறு நன்றி தெரிவித்து கார்டு போட்டு, இப்படத்திற்கு விளம்பரம் தேடிக் கொண்டதாகவும், அதற்காக நான் பணம் கொடுக்க வேண்டும் எனவும் இளையராஜா வழக்கு தொடுத்துள்ளார். இதற்கு பணம் கொடுக்கும் அளவிற்கு நான் சம்பாதிக்கவில்லை. மேலும், நன்றி கூறிய பின்னர் பணம் கேட்பதை தவறான செயலாக நான் கருதுகிறேன். இதனால், இளையராஜாவிற்கு நன்றி கூறி போட்ட கார்டை, படத்தில் இருந்து நீக்கி விட்டோம்.என்னுடைய யூடியூப் சேனலில் படத்தை வெளியிட்ட போது கூட, அதனை நீக்கி விட்டேன். எனவே, இது தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சோனி நிறுவனத்திடம் தான் இளையராஜா கேட்க வேண்டும். இது போன்ற செயல்கள் நிச்சயம் இளையராஜாவிற்கு பெருமை சேர்க்காது. நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த வழக்கில் சரியான தீர்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.