இலங்கை
நாட்டில் ஏற்பட்ட அழிவுக்கு கறுப்பு ஜூலையே காரணம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளிப்படை!

நாட்டில் ஏற்பட்ட அழிவுக்கு கறுப்பு ஜூலையே காரணம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளிப்படை!
ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்படுத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரங்கள் எமது நாட்டுக்கு ஏற்பட்ட சாபக்கேடாகும். எமது நாடு அழிந்துபோனமைக்கு கறுப்பு ஜூலைக் கலவரங்களே காரணம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கறுப்பு ஜூலைக் கலவரங்கள் இடம்பெற்று 42ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கறுப்பு ஜூலை என்பது, அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியால் தமிழ் மக்களைக் கொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சதிச் செயலேயாகும். அது நாட்டின் வரலாற்றையே மாற்றியது.ஜே.ஆர். – ரணில் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்திய அந்தக் காயம் இன்னும் ஆறவில்லை. இந்த நாட்டை ஐம்பது, நூறு வருடங்களுக்கு முன்னேற்ற முடியாதவாறு சீரழித்த நாள் தான் கறுப்பு ஜூலை. அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அதிகமான தமிழர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். சிறிய அமைப்பாக இருந்த புலிகள் இயக்கம் பெரியளவில் வளர்ந்தது. புலிகளை பலப்படுத்துவதற்கு இந்தியா தலையிட்டது. இதன் விளைவாக அனைத்து இனங்களையும் சேர்ந்த அப்பாவி இளைஞர்களும், யுவதிகளும்ஆயிரக்கணக்கில் பலியாகினர். ஐக்கிய தேசிய கட்சி தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்காகவே ஜே.ஆர். இந்த அநியாயங்களைச் செய்தார். மறுபுறம், அந்தப் பழியைத் தூக்கி வேறு நபர்களின் தலையில் போட்டார். அப்படிப் பலியான கட்சிதான் ஜே.வி.பி. நாங்கள் தான் இந்தக் கொடூரங்களைச் செய்தோம் என்று பொய்கூறி எம்மைத் தடைசெய்தார். நாம் அப்போது வளர்ந்து வந்த இடதுசாரிக் கட்சி. இந்தக் கலவரங்களை இந்தியா சரிவரப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தியது – என்றார்.