இலங்கை
புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில

புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில
இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை இராணுவத்துடன் தொடர்புபடுத்தும் சர்வதேசச் சூழ்ச்சி இடம்பெறுகின்றது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் துல்லியமான தகவல்களைப் புலனாய்வாளர்கள் வழங்கியிருந்தனர். அப்படியான சேவைகளை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டால். இதன்பின்னர் ஆயிரம் குண்டுகள் வெடித்தாலும் தகவல்களை வெளியிட புலனாய்வாளர்கள் முன்வரமாட்டார்கள்.
பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலந்த ஜயவர்த்தனவுக்காக அல்ல. உண்மை மற்றும் நீதிக்காகவே நான் குரல் கொடுக்கின்றேன். எமது இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நீதி மற்றும் உண்மைக்காக முன்னிலையாகும் பொறுப்பு என்பன எம்முன் உள்ளன. அதற்காக நாம் முன்னிலையாவோம். இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அப்போது என்னை ‘இரத்தப் பிசாசு’ என்று முத்திரை குத்தினார்கள். அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தான் நாடு சரியான திசைக்கு வரும்வரை போராடினோம்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினர் உள்ளனர் என்பது போன்று காண்பிக்க முனைகின்றனர். இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என புலிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் வகையில் தான் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன- என்றார்.