இந்தியா
ரஷ்ய விமான விபத்தில் 49 பேர் மரணம்; மோசமான வானிலையால் நேர்ந்த சோகம்

ரஷ்ய விமான விபத்தில் 49 பேர் மரணம்; மோசமான வானிலையால் நேர்ந்த சோகம்
ரஷ்யாவின் கிழக்கில் உள்ள அமுர் பகுதியில் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அன்-24 ரக பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 43 பயணிகள் ஐந்து குழந்தைகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 49 பேர் உயிரிழந்தனர். இந்தத் தகவலை ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.ஆரம்பகட்ட விசாரணையில், மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும்போது ஏற்பட்ட விமானப் பணியாளர்களின் தவறு விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அன்-24 விமானம், பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரிலிருந்து சீன எல்லையை ஒட்டியுள்ள அமுர் பிராந்தியத்தின் டின்டா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.டின்டா விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ரேடார் திரையில் இருந்து விமானம் திடீரென காணாமல் போனதாக பிராந்திய ஆளுநர் வசிலி ஓர்லோவ் தெரிவித்தார். இதனையடுத்து, தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. விமானத்தின் எரிந்த பாகங்கள் டின்டாவிலிருந்து சுமார் 16 கி.மீ (10 மைல்) தொலைவில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் ஒரு மீட்பு ஹெலிகாப்டரால் கண்டறியப்பட்டது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.”விமானத்தைத் தேட தேவையான அனைத்துப் படைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன,” என்று பிராந்திய ஆளுநர் தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டார். அவசரகால அமைச்சகம் முதலில் விமானத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கையை சுமார் 40 என்று தெரிவித்திருந்தது. எனினும், பின்னர் 43 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 49 பேர் உயிரிழந்ததாக டாஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது.முதற்கட்ட தகவல்களின்படி, “மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும்போது ஏற்பட்ட விமானப் பணியாளர்களின் தவறு விபத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது” என்று டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான இந்த அன்-24 விமானம் 1976 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதும், அதாவது சுமார் 50 ஆண்டுகள் பழமையான சோவியத் கால விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.