இலங்கை
வடக்கில் தே.ம.சக்தி ஆழமாகக் காலூன்றும்; பிமல் ரத்நாயக்க நம்பிக்கை

வடக்கில் தே.ம.சக்தி ஆழமாகக் காலூன்றும்; பிமல் ரத்நாயக்க நம்பிக்கை
தேசிய மக்கள் சக்தி வடக்கிலும் ஆழமாகக் காலூன்றும். வெளியில் இருந்து தலைவர்களை ஏற்றுமதி செய்யமாட்டோம். வடக்கு மண்ணில் இருந்தே சிறந்த தலைவர்களை உருவாக்குவோம் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- நாம் தெற்கில் பல வருடங்கள் அரசியலில் ஈடுபட்டோம். வடக்கில் அவ்வாறு செய்யவில்லை. 2010ஆம் ஆண்டில் இருந்து தான் வடக்கில் செயற்பட ஆரம்பித்தோம். எனினும், ராஜபக்ச ஆட்சியில் அதற்குரிய சுதந்திரம் இருக்கவில்லை. லலித், குகன் சகோதரர்கள் கடத்தப்பட்டனர். தோழர் சுனில் ஹந்துனெத்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படியான சூழ்நிலையே அன்று இருந்தது.
2015ஆம் ஆண்டிலிருந்து செயற்பட ஆரம்பித்தோம். ஜனாதிபதித் தேர்தலை விடவும் பொதுத்தேர்தலில் எமக்குப் பேராதரவு கிடைத்தது. உள்ளாட்சி சபைத் தேர்தலிலும் எமக்கு ஆதரவு கிடைத்தது. தமிழ்க்கட்சிகள் எனக் கூறிக்கொள்ளும் சில தரப்புகள் தமிழ் ராஜபக்சக்களாக செயற்பட்டு,இனவாதம் பரப்பின. காணி விவகாரத்தையும் கையில் எடுத்தன. எனவே, உள்ளாட்சிசபைத் தேர்தலில் எமக்கு வடக்கில் பின்னடைவு ஏற்பட்டது என்று நாம் கருதவில்லை. யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 81உறுப்பினர்கள் உள்ளாட்சிமன்றங்களில் உள்ளனர். வடக்கில் ஆழமாகக் காலூன்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கும். வடக்குக்குத் தலைவர்களை ஏற்றுமதி செய்யமாட்டோம். அந்த மண்ணில் இருந்து சிறந்த தலைவர்களை உருவாக்குவோம் – என்றார்.