வணிகம்
4 மில்லியன் டாலர் மோசடி… அமெரிக்காவில் கைவரிசை காட்டிய பாலிவுட் தம்பதி; சிக்கியது எப்படி?

4 மில்லியன் டாலர் மோசடி… அமெரிக்காவில் கைவரிசை காட்டிய பாலிவுட் தம்பதி; சிக்கியது எப்படி?
அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் மோசடி தொடர்பாக பாலிவுட் பாடகி மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த மோசடியில், ஏராளமான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரிகள், பாலிவுட் பாடகி சுனிதா மற்றும் அவரது கணவர் சித்தார்த் ‘சாம்மி’ முகர்ஜி ஆகியோரை, அவர்களின் பிளானோ இல்லத்தில் கைது செய்தனர். முதலில், இவர்கள் மீது முதல் நிலை குற்றவியல் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட பிறகு, 5 லட்சம் டாலர் (சுமார் ரூ. 4.32 கோடி) பிணைத் தொகையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், சுனிதா விடுவிக்கப்பட்ட நிலையில் ‘சாம்மி’, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டு, தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்த தம்பதி, போலியான ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களை ஏமாற்றி, மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் திரட்டப்பட்ட நிதியானது, உண்மையில் இல்லாத திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.2024 இல் ஒரு தம்பதி, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகளை அணுகி, ரியல் எஸ்டேட் மோசடியில் 320,000 டாலரை இழந்ததாகக் கூறினர். ஆரம்பத்தில் இது ஒரு சிறிய சிவில் வழக்கு என்று அதிகாரிகள் நம்பினர். ஆனால், பின்னர் இது ஒரு பெரிய மோசடியின் ஒரு பகுதி என்பது தெரியவந்தது.யுலெஸ் காவல் துறையின் அதிகாரி பிரையன் ப்ரென்னன் கூறுகையில், “போலி விலைப்பட்டியல்கள் மற்றும் போலி ஒப்பந்தங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதில் சில ஆவணங்கள் டல்லாஸ் வீட்டு வசதி ஆணையத்தால் வீட்டுவசதி மேம்பாடுகளுக்கு தவறாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறின” என்று தெரிவித்துள்ளார்.டெய்லி மெயில் அறிக்கையின்படி, இதுவரை 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 345 கோடி) உறுதிப்படுத்தப்பட்ட இழப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 20 பேர் இதுவரை புகாரளித்துள்ளனர். இந்த ரியல் எஸ்டேட் மோசடியால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.இது மட்டுமல்லாமல், கொரோனா பெருந்தொற்று காலத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, பே செக் பாதுகாப்புத் திட்ட (PPP) கடனுக்கும் இவர்கள் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஆவணத்தில், இல்லாத ஊழியர்களின் பெயர்களும், நிறுவனத்தின் போலி பதிவுகளும் இருந்தன.இவர்களின் மோசடி பட்டியலில் முதியோர்களும் குறிவைக்கப்பட்டனர். முதியோர்களுக்கு மிரட்டும் மின்னஞ்சல்களை அனுப்பி, உடனடியாக கோரப்பட்ட தொகையை செலுத்தவில்லை என்றால் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர்.பல மோசடிகளை செய்த இந்த பாலிவுட் தம்பதியினர், தங்கள் நடவடிக்கைகளை மேலும் சட்டப்பூர்வமாக்க, 2024 இல் இந்தியன் டிரெடிஷன்ஸ் & கல்ச்சுரல் சொசைட்டி ஆஃப் நார்த் அமெரிக்கா (Indian Traditions & Cultural Society of North America) என்ற இலாப நோக்கற்ற அமைப்பை தங்கள் பிளானோ இல்லத்தில் பதிவு செய்து நடத்தி வந்துள்ளனர்.இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு 5 முதல் 99 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். இந்தியாவில் இருந்து புகலிடம் தேடி அமெரிக்கா வந்ததாகக் கூறப்படும் இவர்களின் தற்போதைய குடியேற்ற நிலை தெளிவாக இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சி.பி.எஸ் நியூஸ் அறிக்கையின்படி, இந்த தம்பதி மீது மும்பையிலும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.