இலங்கை
ஆடி 2வது வெள்ளியில் அம்மனின் முழு அருளையும் பெற வழிபாட்டு முறை

ஆடி 2வது வெள்ளியில் அம்மனின் முழு அருளையும் பெற வழிபாட்டு முறை
ஆடி மாதத்தின் விசேஷமான, மங்களகரமான தினங்களில் ஆடி வெள்ளி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வழக்கமாக எந்த மாதத்தில் வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டாலும் அது சிறப்பு வாய்ந்ததாகும்.
அதிலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் கூடுதல் விசேஷமான பலன்கள் கிடைக்கும்.
ஆடி மாதத்தில் இந்த ஆண்டு ஐந்து வெள்ளிக்கிழமைகள் வருகிறது. இதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை வழிபடுவது சிறப்பு.
ஆடி மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை ஜூலை 25ம் திகதி வருகிறது. இந்த நாளில் அம்பிகையை மங்கள கெளரியாக பாவித்து வழிபட வேண்டும். அனைத்து பெண் தெய்வங்களையும் கெளரியின் வடிவமாக பாவித்து இந்த நாளில் வழிபாடு செய்ய வேண்டும்.
சிவ பெருமானை அடைய வேண்டும் என்பதற்காக கடுமையாக தவம் இருந்து, ஈசனை எப்போதும் பிரியாமல் இருக்கும் வரத்தை பெற்றவள் அம்பிகை.
அவளைப் போலவே விரதம் இருந்து வெள்ளிக்கிழமை வழிபடுபவர்களுக்கு மனம் மகிழ்ந்து முழுமையான அருளை அம்பிகை வழங்குவாள் என்பது நம்பிக்கை.
ஆடி 2வது வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, மஞ்சள், குங்குமம் போன்ற மங்கள பொருட்களை அணிந்து, விரதத்தை துவக்கி விட வேண்டும். முடிந்தவர்கள் முழுவதுமாக உபவாசம் இருந்து வழிபடலாம். முடியாதவர்கள், எளிமையான சைவ உணவுகளாக சாப்பிட்டுக் கொண்டு விரதம் இருக்கலாம்.
மாலை 04.30 மணிக்கு பிறகு 6 மணிக்குள் வீட்டின் பூஜை அறையில் ஒரு மனையில் சிவப்பு துணி விரித்து, அம்பிகையின் படத்திற்கு என்ன பூ கிடைக்கிறதோ அடைத்து படைத்து, விளக்கேற்றி வைக்க வேண்டும்.
வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், ரூ.11 காணிக்கை போன்ற மங்கல பொருட்களை அம்மனுக்கு படைக்க வேண்டும். முடிந்தவர்கள் ரவிக்கை துணி, வளையல், பூ போன்றவற்றையும் வைத்து வழிபடலாம்.
அம்பிகைக்கு பாயசம், சர்க்கரை பொங்கல் என ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து, லலிதா சகஸ்வரநாமம், காமாட்சி அஷ்டோத்திரம், துர்காஷ்டம், துர்க்கை அம்மன் ஸ்லோகம் என உங்களுக்கு தெரிந்த அம்மன் ஸ்லோகங்கள், மந்திரங்களை சொல்லி வழிபடலாம். எதுவும் தெரியாதவர்கள் அபிராமி அந்தாதியின் எந்த பாடல் தெரிகிறதோ அதை சொல்லி வழிபட வேண்டும்.
பிறகு கற்பூரத ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். அம்மனுக்கு படைத்த மங்கள பொருட்களை ஏதாவது ஒரு சுமங்கலிக்கு கொடுத்து, அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு, அம்மனுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஆடி 2வது வெள்ளியில் அம்மனை இப்படி வழிபடுவதால் குடும்ப நலன் சிறக்கும். தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
மங்களகரமான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். ஆடி வெள்ளி அன்று பெண்கள் மகிழ்ச்சியாக அம்மனுக்கு வீட்டில் விளக்கேற்றி, பூஜை செய்து வழிபட்டாலும், வீட்டில் சாம்பிராணி மனம் வீச தூப தீபங்கள் காட்டினாளும் அம்பிகை மனம் மகிழ்வாள்.
முடிந்தவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அம்பிகைக்கு அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது யாருக்காவது அன்னதானம் கொடுக்கலாம். இது அம்பிகையின் மனதை இன்னும் மகிழ்ச்சி அடைய செய்யும்.