இலங்கை
குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
இலத்திரனியல் முறையில் விசா விநியோகிக்கும் நடவடிக்கையை இரு தனியார் நிறுவனத்துக்கு வழங்குதவற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைத்தரவை மீறி செயற்பட்டமையூடாக நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பிலான குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு வியாழக்கிழமை (24) திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி அதுவரை முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இலத்திரனியல் முறையில் விசா விநியோகிக்கும் நடவடிக்கையை இரு தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவை மீறி செயற்பட்டமையூடாக நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இலத்திரனியல் முறையில் விசா விநியோகிக்கும் நடவடிக்கையை இரு தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை தடுப்பதற்கான உத்தரவு கோரிய அடிப்படை உரிமை மீறல் மனுவும் நீதிமன்றை அவமதித்தமை குறித்த குற்றப்பத்திரிகையை மையபப்டுத்தி இந்த வழக்கு இடம்பெற்று வந்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எந்த நிபந்தனைகளும் இன்றி முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு எதிரான தண்டனை நேற்று 24 அறிவிப்பதாகவும் அதற்கு முன்னர் எழுத்து மூல சமர்ப்பணங்கள் இருப்பின் அவற்றை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாரும் இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
நீதியர்சர் யசந்த கோதாகொட தலைமையிலான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.