பொழுதுபோக்கு
சிஜி, ரோப் எதுவும் இல்ல… பெட் மட்டும் வச்சி ஓடுற ரயில்ல சண்டை; முரட்டுக்காளை ட்ரெயின் ஃபைட் உருவானது இப்படித்தான்!

சிஜி, ரோப் எதுவும் இல்ல… பெட் மட்டும் வச்சி ஓடுற ரயில்ல சண்டை; முரட்டுக்காளை ட்ரெயின் ஃபைட் உருவானது இப்படித்தான்!
தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்த ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தின் ரயில் சண்டைக் காட்சி, எவ்வாறு உருவானது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.சினிமா வரலாற்றில் கமர்ஷியல் படங்களே பெருவாரியான வெற்றி பெற்றன. இதில், ரஜினிகாந்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில், ரஜினிகாந்தின் திரைப்படங்கள் அந்த அளவிற்கு வசூலில் சாதனை படைத்துள்ளன. இதில் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த ‘முரட்டுக்காளை’ திரைப்படம் கூடுதல் சிறப்பு பெற்றது என்று கூறலாம். இந்தப் படத்தில் ஒரு ரயில் சண்டைக் காட்சி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த சண்டைக் காட்சி அன்றைய காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை எவ்வாறு படமாக்கினார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பல தகவல்களை கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.அதில், “சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர், முரட்டுக்காளை திரைப்படத்தின் மூலமாக ஏ.வி.எம் நிறுவனம் சினிமா உலகில் ரீ-என்ட்ரி கொடுத்தனர். அதன்படி, இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். அப்படத்தில் ஒரு ரயில் சண்டைக் காட்சி இடம்பெற்றது.அந்த சண்டைக் காட்சியை பெரிய அளவில் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். இதற்காக வெளிநாடு அல்லது பாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர்களை அழைத்து வர வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனத்தினர் நினைத்தனர். ஆனால், இதற்கு ஜூடோ ரத்தினத்திற்கும், எஸ்.பி. முத்துராமனுக்கும் உடன்பாடு கிடையாது.ஏனெனில், முழு படத்தின் சண்டைக் காட்சிகளையும் நாம் செய்து விட்டு, ஒரே ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் மற்றவர்களை அழைத்து வந்தால் நமக்கு அவமானமாக இருக்கும் என்று கூறினார்கள். எனவே, இதனை ஒரு சவாலாக ஏற்று ஜூடோ ரத்தனம் செய்யலாம் என்று கருதினார்.இப்போது இருப்பதை போன்று கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், ரோப் வசதிகள் எதுவும் இல்லாமல் அந்த சண்டைக் காட்சியை ஓடும் ரயிலில் படமாக்கினோம். தமிழ் சினிமா சண்டை பயிற்சியாளர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் அந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.