இலங்கை
தமிழர்களுக்கு வழங்கப்பட்ட துன்பத்தின் கொடூரத்தையே பறைசாற்றுகிறது செம்மணி!

தமிழர்களுக்கு வழங்கப்பட்ட துன்பத்தின் கொடூரத்தையே பறைசாற்றுகிறது செம்மணி!
கனேடிய கன்சர்வேடிவ் தலைவர் பொலியேவ் அறிக்கை
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட துன்பத்தின் கொடூரத்தையே செம்மணிப்புதைகுழி வெளிப்படுத்துகின்றது. நாம் ஆட்சியமைக்கும் காலத்தில் இலங்கையின் இனப்படுகொலையாளிகள் அனைவருக்கும் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தடைகளை அறிவிப்போம் – இவ்வாறு தெரிவித்துள்ளார் கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பொலியேவ்.
கறுப்பு ஜூலையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் மேலும் உள்ளதாவது:- தமிழ்க் கனேடியர்கள் கறுப்பு ஜூலைப் படுகொலைகளை அஞ்சலிக்கும் சம நேரத்தில், யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழியில் இருந்து ஏராளமான மனித என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுவருகின்றன. குழந்தைகளின் மனித என்புக்கூடுகள், விளையாட்டுப் பொருள்கள். புத்தகப்பைகள் என அந்த மனிதப்புதைகுழியில் இருந்து மீட்கப்படும் விடயங்கள் பதைபதைக்க வைக்கின்றன. அத்துடன். தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட துன்பங்களின் ஈவிரக்கமற்ற தன்மையையும் காண்பிக்கின்றன.
தமது உறவுகள் தற்செயலாகக் காணாமற்போகவில்லை என்று தமிழ்க் கனேடியர்களும், ஈழத்தமிழர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கூற்றின் உண்மைத் தன்மையை செம்மணி மனிதப் புதைகுழி நிரூபித்து வருகின்றது. தமிழ் உறவுகள் கொண்டு செல்லப்பட்டார்கள் – மௌனமாக்கப்பட்டார்கள் – இரகசியமாக புதைக்கப்பட்டார்கள். இந்த அநியாயங்களுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் கனடா பலமாகக் குரல்கொடுக்கும். நான் முன்னர் வாக்குறுதி வழங்கியது போல், கன்சர் வேடிவ் கட்சி ஆட்சியமைக்கும் வேளையில், தமிழர்களின் நீதிக்கான பயணம் மேலும் பலம்பெறும். தமிழர்களிற்கு எதிரான இனப்படு கொலையில் ஈடுபட் டவர்களுக்கு வரலாறு காணாத தடைகளை விதிப்பேன். மீண்டுமொரு முறை அநீதிகள் இடம்பெறாத வகையில் தமிழர்களைப் பலப்படுத்துவேன்- என்றார்.