பொழுதுபோக்கு
திருச்சிற்றம்பலம் Vs கோட்டி… அரவிந்த்சாமி இந்த அளவுக்கு காமெடி பண்ணுவாரா? நீங்கள் அதிகம் அறிந்திடாத ஒரு படம்!

திருச்சிற்றம்பலம் Vs கோட்டி… அரவிந்த்சாமி இந்த அளவுக்கு காமெடி பண்ணுவாரா? நீங்கள் அதிகம் அறிந்திடாத ஒரு படம்!
தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக வலம் வந்தவர் தான் அரவிந்த் சாமி. ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள அவர் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதே சமயம், அவர் முழுநீள காமெடி படம் ஒன்றில், தனது ஒவ்வொரு அசைவுகளையும் சிரிக்க வைத்திருப்பார். அந்த படம் பற்றி பார்ப்போம்.தமிழ் சினிமாவில் 1990-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அரவிந்த் சாமி. இந்த படத்தில் கலெக்டர் கேரக்டரில் நடித்திருந்த இவர், அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் காதல் நாயகனாக நாட்டுப்பற்று உள்ள பத்திரிக்கையாளர் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். அடுத்து மறுபடியும், தாலாட்டு, பம்பாய், இந்திரா, மின்சார கனவு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.இந்த படங்கள் அனைத்திலுமே அரவிந்த் சாமி காதல் மற்றும் ஓரளவு சீரியஸான கேரக்டரில் தான் நடித்திருப்பார். ஆனால் 1997-ம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் சீரியல் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு படம் முழுக்க காமெடியில் அசத்தி அனைவரையும் வியக்க வைத்தவர் தான் அரவிந்த் சாமி. இந்த படத்தில் மணிவண்ணனுடன் இவர் நடித்த அனைத்து காட்சிகளுமே இன்றைக்கு பார்த்தாலும், புதுமையாக இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காத படங்களில் ஒன்றாக இந்த படத்தை சொல்லலாம்.இந்த அளவுக்கு காமெடியில் கலக்கிய அந்த படம் தான் புதையல். 1997-ம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், மம்முட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். ஒரு புதையலை தேடி அலையும் தீவிரவாத கும்பல், அவர்களை தடுக்க நினைக்கும் மம்முட்டியின் ராணுவ படை, அந்த புதையலை எடுக்க திட்டமிடும் அரவிந்த்சாமி, கவுண்டமணி செந்தில் டீம் என ஒரு கமர்ஷியல் படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களும் பக்காவாக இந்த படத்தில் பொருந்திருக்கும்.படத்தில் ஒருபக்கம் தீவிரவாதகளை கட்டுப்படுத்த மம்முட்டியின் ஆக்ஷன் சீரியஸாக சென்றுகொண்டிருந்தாலும் மறுபக்கம், கொரியர் அலுவலகத்தில் மணிவண்ணன் கீழே வேலை செய்யும் அரவிந்த் சாமி அவர் தங்கியிருக்கும் இடத்தில் நாடகம் நடத்தும் கவுண்டமணி செந்தில் கோஷ்டிகள் காமெடியில் அசத்தியிருப்பார்கள். குறிப்பாக கோட்டி (எ) கோடீஸ்வரன் கேரக்டரில் நடித்துள்ள அரவிந்த் சாமி, வரும் அனைத்து காட்சிகளும், சிரிக்காமல் இருக்கவே முடியாது என்னும் அளவுக்கு நடித்திருப்பார். அரவிந்த் சாமி இந்த அளவுக்கு காமெடி அவர் நடித்த வேறு எந்த படத்திலும் செய்ததே இல்லை.அதேபோல், கொரியர் அலுவலகத்தின் முதலாளி திருச்சிற்றம்பலம் கேரக்டரில் வரும் மணிவண்ணன் – கோட்டி கேரக்டரில் வரும் அரவிந்த் சாமி இடையே நடக்கும் காட்சிகள், காமெடியின் உச்சம் என்று சொல்லலாம். அவர்கள் சீரியஸாகத்தான் பேசிக்கொள்வார்கள். ஆனால் அதை பார்க்கும் நமக்கு சிரிப்பை அடக்க முடியாது. அதேபோல் இந்த படத்தில் அரவிந்த் சாமியின் காஸ்யூம்ஸ் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். ஒரு காட்சியில் கூட சீரியஸாக நடிக்காமல் முழுக்க முழுக்க காமெடியில் அசத்திய அரவிந்த் சாமிக்கு இந்த படம் பெரிய ஹிட் தான்.புதையல் படத்தின் இயக்குனர் செல்வா அடுத்து அரவிந்த் சாமி நடிப்பில், வணங்காமுடி என்ற படத்தை இயக்குவதாகவும், அதில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அந்த படம் ட்ராப் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.