இலங்கை
பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரானின் சகாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரானின் சகாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலின் தலைவரான “கஞ்சிபானை இம்ரான்” என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹம்மட் இம்ரான் என்பவரின் நெருங்கிய நண்பன் என சந்தேகிக்கப்படும் மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, “கஞ்சிபானை இம்ரானின்” நெருங்கிய நண்பன் என சந்தேகிக்கப்படும் மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவர் விசாமற்றும் கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவர் நேற்றைய தினம் அதிகாலை 02.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததையடுத்து விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.