வணிகம்
ரூ. 3,000 கோடி கடன்… யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு அனில் அம்பானி லஞ்சம்; வெளியான அதிர்ச்சி தகவல்

ரூ. 3,000 கோடி கடன்… யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு அனில் அம்பானி லஞ்சம்; வெளியான அதிர்ச்சி தகவல்
தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்களுக்கு யெஸ் வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் சுமார் 3,000 கோடி ரூபாய் கடன்களை வழங்கியுள்ளனர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு அவர்கள் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் கடன் பரிவர்த்தனைகள் 2017 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளன.யெஸ் வங்கியின் தரப்பில் இருந்து, கடன் ஒப்புதலுக்கு முன்பு ரகசிய நிறுவனங்கள் மூலம் பணம் பெற்றுள்ளனர் என்றும், இது சட்ட விரோதமாக நடைபெற்றதாகவும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.கடன் ஒப்புதல் செயல்முறையில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடன் ஒப்புதல் குறிப்பாணைகள் (Credit Approval Memorandums) பின் தேதியிடப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. மேலும், வங்கியின் கொள்கைகளை மீறி, உரிய பரிசீலனை அல்லது கடன் பகுப்பாய்வு இல்லாமல் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், கடனாக பெறப்பட்ட நிதி, போலி நிறுவனங்கள் மற்றும் பிற குழும நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு பல விதிமீறல்களை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. போதிய நிதி நிலை இல்லாத நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் வாங்கிய நிறுவனங்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டதாக தெரிய வருகிறது.அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்களுக்கு எதிரான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனையை தொடங்கியுள்ளது.இந்த விசாரணை, நிதி மோசடி மற்றும் வங்கிக் கடன்களை திசை திருப்பியதாகக் கூறப்படும் இரண்டு சி.பி.ஐ வழக்குகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. நேஷனல் ஹவுசிங் பேங்க், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), தேசிய நிதி அறிக்கை ஆணையம் (NFRA) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றில் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.வங்கிகள், முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொது நிறுவனங்களை ஏமாற்றி கடனாக பெற்ற நிதியை தவறாக பயன்படுத்தி ஒரு திட்டமிட்ட மோசடி நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது நடைபெற்று வரும் இந்த நடவடிக்கையில், 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 25-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணை மேலும் விரிவடையும் என கருதப்படுகிறது.