பொழுதுபோக்கு
வடிவேலு வர லேட்; 16 நாட்கள் காத்திருந்த காமெடி நடிகர்; கடைசி 2 நாளில் நடந்த பெரிய சம்பவம்!

வடிவேலு வர லேட்; 16 நாட்கள் காத்திருந்த காமெடி நடிகர்; கடைசி 2 நாளில் நடந்த பெரிய சம்பவம்!
விஜய் நடித்த திருப்பாச்சி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும், நடிகர் பெஞ்சமின் அதற்கு முன்பு பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில், சேரன் இயக்கத்தில் வெளியான வெற்றிக்கொடி கட்டு என்ற படத்தில் நடித்தபோது வடிவேலு வருவதற்காக 16 நாட்கள் காத்திருந்ததாக கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் ஃபீல் குட் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்ற வர் சேரன். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், 1997-ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அநடத படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து தேசியகீதம், பொற்காலம் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து, 2000-ம் ஆண்டு வெளியான வெற்றிக்கொடி கட்டு படத்தை இயக்கியிருந்தார்.பார்த்திபன், முரளி, வடிவேலு, மனோரமா மீனா, மாளவிகா, ரமேஷ் கண்ணா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்து பணம் கட்டி ஏமார்ந்து போனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் பார்த்திபன் – வடிவேலு இடையேயான காட்சிகள், காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மைனர் கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார். இவர் பார்த்திபனிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் காட்சிகள் அனைத்துமே பெரிய வடிவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் வடிவேலுவின் உறவினராக நடித்திருந்தவர் நடிகர் பெஞ்சமின். ஒரு காட்சி மட்டுமே நடித்திருந்தார். ஆனாலும் இந்த காட்சி இன்றுவரை நல்ல காலம் கடந்தும் நிலைத்திருக்கிறது. இந்த காட்சியில் நடிக்க நடிகர் பெஞ்சமின் 16 நாட்கள் காத்திருந்ததாக கூறியுள்ளார்.இது குறித்து ஒரு நேர்காணலில் பேசிய அவர், வெற்றிக் கொடி கட்டு திரைப்படத்தில் நடிக்க, வெளியூர் அழைத்து சென்றார்கள். அப்போது முதல் நாள், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். ஒரு சேர் கொடுத்து உட்கார வைத்தார்கள். வேளாவேளைக்கு சாப்பாடு ஜூஸ் எல்லாம் வந்தது. மாலையில் ஷூட்டிங் முடிந்து அனைவரும் கிளம்பிவிட்டார்கள். நானும் வந்துவிட்டேன். மறுநாள் இப்படித்தான் நடந்தது. இப்படியே தொடர்ந்து 16 நாட்கள் நடந்தது. எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. சேரனிடம் இதுகுறித்து பேசலாம் என்று நானும் நெல்லை சிவாவும் சென்றோம்.சேரனை சந்தித்து சார் நான் ஊருக்கு போகிறேன் என்று சொன்னேன். ஏன் என்னாச்சு, ரூம் சரியில்லையா என்று கேட்டார். அதெல்லாம் இல்லை சார் ஏ.சி.ரூம்தான் போட்ருக்காங்க, படப்பிடிப்புக்கு வந்தால் சும்மாவே உட்கார்ந்திருக்கிறேன். இன்னும் 2 நாள்ல ஷூட்டிங் முடிய போகுது என்று சொல்கிறார்கள். சென்னை சென்றாலாவது ஏதாவது படத்தில் நடிக்க வாய்ப்பு வரும் என்று சொன்னேன். இதை கேட்ட சேரன், வடிவேலு சார் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. நாளைக்கு அவர் வந்துவிடுவார். உங்கள் காட்சி நாளைக்கு படமாக்கலாம் என்று சொன்னார்.அதன்படி அடுத்தநாள் வடிவேலு வந்தார். அடுத்த 2 நாளும் இரவும் பகலுமாக 8 சீன் படமாக்கினார் சேரன். ஆனால் படத்தில் டைமிங் அதிகம் இருந்ததால், ஒரு காட்சி மட்டுமே படத்தில் இடம் பெற்றுள்ளது என்று பெஞ்சமின் கூறியுள்ளார்.