தொழில்நுட்பம்
இனி நெட்ஃபிளிக்ஸ் கண்டெண்ட் ஒரு நொடியில்! வினாடிக்கு 1.02 Pbps; ஜப்பானின் இணைய வேகப் பாய்ச்சல்!

இனி நெட்ஃபிளிக்ஸ் கண்டெண்ட் ஒரு நொடியில்! வினாடிக்கு 1.02 Pbps; ஜப்பானின் இணைய வேகப் பாய்ச்சல்!
உலகின் அதிவேக இணைய வேகத்தை உருவாக்கி ஜப்பான் புதிய உலக சாதனை படைத்துள்ளது! ஜப்பானின் தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையம் (NICT), சுமிடோமோ எலக்ட்ரிக் மற்றும் சில ஐரோப்பிய ஆய்வாளர்களுடன் இணைந்து, வினாடிக்கு 1.02 பெட்டாபைட்ஸ் (Petabits – Pbps) என்ற இணைய வேகத்தை எட்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.இந்த இணைய வேகம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை சில உதாரணங்கள் மூலம் பார்க்கலாம். நெட்ஃபிக்ஸ் தளத்தில் உள்ள அனைத்துப் படங்களையும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். நீங்கள் ஒரு சீரியலைத் தேடும் நேரம் கூட ஆகாது. உலகின் மிகப்பெரிய அறிவுத் தளமான ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள அனைத்துத் தகவல்களையும் ஒரே நொடியில் பத்தாயிரம் முறை பதிவிறக்கம் செய்யலாம். ஒரே நேரத்தில் 10 மில்லியன் 8K அல்ட்ரா-HD வீடியோக்களைத் தடையில்லாமல் ஸ்ட்ரீம் செய்யலாம். இந்தியாவின் சராசரி இணைய வேகம் சுமார் 63.55 Mbps ஆக இருக்கும் நிலையில், ஜப்பானின் இந்தப் புதிய வேகம், இந்தியாவின் சராசரி வேகத்தை விட சுமார் 1.6 கோடி (16 மில்லியன்) மடங்கு அதிகமாகும்.இந்த அதிவேக இணையத்தைப் பெற, வழக்கமான ஃபைபர் ஆப்டிக் கேபிள்களின் அதே தடிமன் கொண்ட, ஆனால் 19 தனித்தனி பாதைகளைக் கொண்ட சிறப்பு 19-கோர் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் 1,808 கி.மீ. தூரத்திற்கு வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது. இது, தொலைதூர இடங்களுக்கும் அதிவேக இணைய இணைப்பை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை காட்டுகிறது.தற்போது இது ஆய்வகச் சோதனைகளில் இருந்தாலும், இந்த முன்னேற்றம் எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகள், தன்னாட்சி வாகனங்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி (VR), ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) போன்ற அதிநவீன தொழில் நுட்பங்களுக்குப் பெரிய அளவிலான தரவுப் பரிமாற்றம் தேவைப்படும். ஜப்பானின் இந்தச் சாதனை, இத்தகைய எதிர்காலத் தேவைகளுக்குத் தேவையான அடித்தளத்தை அமைக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு வெறும் ஆய்வகச் சாதனை மட்டுமல்ல; இது உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு புதிய சவாலை முன்வைத்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் இணைய வேகத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சி வரக்கூடும் என்பதற்கான அறிகுறியாகவும் இது உள்ளது.