விளையாட்டு
செப்டம்பரில் தொடங்கும் ஆசிய கோப்பை… போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்

செப்டம்பரில் தொடங்கும் ஆசிய கோப்பை… போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) தலைவர் மொஹ்சின் நக்வி இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், போட்டி தொடர்பான விரிவான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 17-வது ஆசிய கோப்பை போட்டி யை நடத்தும் உரிமத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ பெற்றிருந்தது. செப்டம்பர் மாதம் இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களில் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் பாகிஸ்தானும் ஒன்று. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் உறவு மேலும் மோசமாகி விட்டதால், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று விளையாடுவதில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் ஏற்கனவே கடந்த பிப்ரவரி, மார்ச்சில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் நடந்த போது இந்திய அணி பாதுகாப்பு அச்சம் காரணமாக அங்கு செல்ல மறுத்தது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஆசிய கோப்பை போட்டிக்கும் அது போன்ற சிக்கல் உருவானதால் அது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் டாக்காவில் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் ஏ.சி.சி தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) தலைவருமான மொஹ்சின் நக்வி தலைமையில் நடைபெறவிருந்த ஏ.சி.சி பொதுக்குழுக் கூட்டத்திலிருந்து விலகுவதாக பி.சி.சி.ஐ தெரிவித்தது. இருப்பினும், பி.சி.சி.ஐ மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார்.இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் போட்டியை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தியாவும் பொதுவான இடத்தில் போட்டியை நடத்த ஒப்புக் கொண்டது. இதையடுத்து இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது. அங்குள்ள துபாய் மற்றும் அபுதாபியில் போட்டி நடைபெறும் என்று தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் ஏ.சி.சி ஆடவர் ஆசிய கோப்பை 2025-க்கான தேதிகளை உறுதிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் போட்டி செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும். கிரிக்கெட்டின் அற்புதமான காட்சியை நாங்கள் எதிர்நோக்குகிறோம்! விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். #Cricketwins” என்று அவர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆசிய கோப்பை போட்டிகள் டி20 பார்மெட்டில் நடைபெற உள்ளது. 2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக முந்தைய ஆசியக் கோப்பை போட்டிகள் ஒருநாள் பார்மெட்டில் நடத்தப்பட்டது. அதில் இந்தியா இலங்கையை வீழ்த்தி பட்டத்தை வென்றது. 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பையில் எட்டு அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் தவிர, ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெறலாம். ஏற்கனவே திட்டமிடப்பட்ட அட்டவணையில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஓமன் அணிகளும் இடம் பெற்று இருந்தன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.