பொழுதுபோக்கு
நடிக்க தெரியல… சரியா நடக்க தெரியல; இவரு நடிகர் ஆக மாட்டார்னு நினைச்சேன்; சூர்யா பற்றி ரஜினி ஓபன் டாக்!

நடிக்க தெரியல… சரியா நடக்க தெரியல; இவரு நடிகர் ஆக மாட்டார்னு நினைச்சேன்; சூர்யா பற்றி ரஜினி ஓபன் டாக்!
சூர்யா தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய ‘நேருக்குநேர்’ படத்தில், அவரது நடிப்புத் திறன் குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்தன. சண்டை போடுவது, நடப்பது, வசனம் பேசுவது, க்ளோசப்பில் சரியாகச் சிரிப்பது கூட அவருக்குச் சரியாக வரவில்லை என்று கூறப்பட்டது. “இவர் எப்படி நடிகர் ஆக போகிறார்? இவரு நல்ல நடிகர் ஆக மாட்டார்” என்று தான் நினைத்ததாக நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். அதே காலகட்டத்தில், சூர்யாவின் சகோதரர் கார்த்தி, ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் தனது முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். கிளைமாக்ஸ் காட்சிகளில் கார்த்தி வெளிப்படுத்திய நடிப்பு, பல அனுபவமிக்க நடிகர்களாலும் செய்ய முடியாத அளவுக்கு இருந்தது என்றும் ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் பாராட்டி பேசியிருந்தார்.அப்படி ஒரு நிலையில் இருந்த சூர்யா, தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு எப்படி இவ்வளவு பெரிய நடிகராக மாறினார் என்றால், அதற்கு அவர் நடித்த ஒவ்வொரு படங்களும், குறிப்பாக இயக்குனர் பாலாவின் பங்கு மிகப் பெரியது என்றார் ரஜினி. பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ திரைப்படம், சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் சூர்யாவின் நடிப்புத் திறனை வெளிக்கொணர்ந்தது. ‘பிதாமகன்’ படத்தில் சூர்யா ஏற்று நடித்த கதாபாத்திரம், நகைச்சுவை கலந்திருந்தாலும், நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய ஒரு கடினமான பாத்திரமாக இருந்தது. அதை சூர்யா மிகச் சிறப்பாகச் செய்து, தனது நடிப்புத் திறனை நிரூபித்தார்.சூர்யா தனது நடிப்பை மேலும் மெருகேற்றிக் கொண்டே சென்றார். கஜினி, காக்க காக்க, சிங்கம் 1 & சிங்கம் 2, அயன் போன்ற படங்களில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள், “அவர் மட்டும்தான் செய்ய முடியும், வேறு யாராலும் முடியாது” என்று சொல்லுமளவுக்கு மிகவும் தனித்துவமாக இருந்ததாக ரஜினி கூறினார். ஒரு காலத்தில் நடிக்கத் தெரியவில்லை என்று கருதப்பட்ட நடிகர், தனது கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சரியான வழிகாட்டுதலின் மூலம், இன்று இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். சூர்யாவின் இந்த பயணம், விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.