இலங்கை
நல்லூர் கந்தன் திருவிழாவிற்கு மணல் கொடுக்க எதிர்ப்பு; மக்கள் – பொலிஸார் முறுகல்!

நல்லூர் கந்தன் திருவிழாவிற்கு மணல் கொடுக்க எதிர்ப்பு; மக்கள் – பொலிஸார் முறுகல்!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடந்தோறும் குறிப்பிட்ட மணல் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று மணல் வழங்க பிரதேச மக்கள் எதிர்பு தெரிவித்த நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் விநியோகம் இடம்பெறுகிறது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஜூலை 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஒவ்வொருவருடமும் நல்லூர் கந்தனுக்கு அம்பன் பகுதியில் இருந்தே மணல் எடுத்து செல்லப்படுகின்றது.
இநிலையில் சட்டவிரோத மணல் அகழ்வால் இம்முறை மணல் வழங்குவதற்கு ஏதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் மணல் வழங்க மறுத்திருந்தனர்.
இதனால் அம்பன் பிரதேச செயலர் மற்றும் கிராம மக்களுக்கு இடையில் முறுகல் நிலை இடம்பெற்றதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் விநியோகம் இடம்பெறுகிறது.
அதேவேளை வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் , தனது கிராமத்தில் மணல் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகின்றது.
எனினும் அதனை மீறி தனிநபர் ஒருவரது பெயரில் கனிய வளங்கள் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் அனுமதியினை பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் சில வருடங்களுக்கு முன்னர் தனிநபர்கள் எவருக்கும் கனிய மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் அதனையும் மீறி தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.