இந்தியா
அரசு பள்ளி இடஒதுக்கீட்டில் மாற்றம் தேவை; எம்.பி.பி.எஸ் மாணவர்களுடன் ஒப்பந்தம் அவசியம் – புதுச்சேரி அ.தி.மு.க

அரசு பள்ளி இடஒதுக்கீட்டில் மாற்றம் தேவை; எம்.பி.பி.எஸ் மாணவர்களுடன் ஒப்பந்தம் அவசியம் – புதுச்சேரி அ.தி.மு.க
அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ கல்வி பயில வாய்ப்பு அளிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்காக முதல்வரின் மனநிலையில் மாற்றம் தேவை. முந்தைய தமிழக அ.தி.மு.க ஆட்சியில் அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் நலனுக்காக மருத்துவக் கல்வியில் அரசின் இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எடப்பாடியாரால் கொண்டு வரப்பட்டது. அதனை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் நலனுக்காக 10% இட ஒதுக்கீடு மருத்துவ கல்வியில் உள் ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. தற்பொழுது அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வியில் அரசின் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவ்வாறு ஒன்றாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தொடர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வியில் சேர வாய்ப்புள்ளதால் ஒன்றாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் கல்விப் பயலாத மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் மருத்துவக் கல்வியில் சேர முடியவில்லை.எனவே அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ கல்வி பயில வாய்ப்பு அளிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இந்த ஆண்டு நீட் தேர்வில் புதுச்சேரி மாணவர்கள் 1432 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 37 இடங்களில் சேர்வதற்கு 37 அரசு பள்ளி மாணவர்கள் கூட இல்லாமல், இந்த ஆண்டும் குறைவாக 29 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற சிறப்பு மருத்துவர்கள் முன்வர வேண்டும் என முதல்வர் நல்லெண்ணத்தில் தெரிவித்துள்ளார். அரசின் இட ஒதுக்கீட்டில் அரசின் நிதி பங்களிப்புடன் மருத்துவ உயர்கல்வி பயின்று படிப்பை முடித்தவர்கள் தானாக அரசு மருத்துவமனைகளில் நிச்சயம் பணிபுரிய முன்வர மாட்டார்கள். தற்பொழுது மருத்துவ கல்வியில் கிளினிக்கில் போஸ்டில் பொது மருத்துவம், சர்ஜரி, ஆர்த்தோ, குழந்தை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அரசின் இட ஒதுக்கீடாக மொத்தம் 138 உயர் மருத்துவ இடங்கள் உள்ளது. பிம்ஸ் நிறுவனத்தில் 21 இடங்களும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் 49 இடங்களும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி கல்லூரியில் 54 இடங்களும், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 14 இடங்களும் என 138 இடங்களுக்கு ஆண்டுதோறும் அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது.மருத்துவ உயர்கல்வி முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் அரசு வழங்கும் சம்பளத்தில் மருத்துவ மாணவர்கள் பணி செய்ய வேண்டுமென தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவ உயர்கல்வியில் சேரும்போதே அரசிடம் மாணவர்கள் ஒப்பந்தம் போடும் நிலை பல மாநிலங்களில் உள்ளது.புதுச்சேரியில் மருத்துவ உயர்கல்வியில் அரசு இடங்களில் சேரும் மாணவர்களிடம் எந்த ஒப்பந்தமும் அரசால் போடப்படாததால் அரசு மருத்துவமனைகளில் எந்த சிறப்பு மருத்துவர்கள் தானாக பணி செய்ய முன் வருவதில்லை. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ளது போன்று மருத்துவ உயர்கல்வியில் அரசின் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் கட்டாயம் இரண்டு, மூன்று ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி செய்ய வேண்டுமென ஒப்பந்தம் போட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மருத்துவத்தில் உயர்கல்வி முடித்த சிறப்பு மருத்துவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் கிராமப்புறத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணிபுரிய முன் வருவார்கள். இவ்வாறு அன்பழகன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.